மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அந்நிய செலாவணியினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தங்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 15% வீத இறக்குமதி வரியை தளர்த்துதல், இரத்தினக்கல், ஆபரண தொழிற்துறையானது புதிய வருமான வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதன் காரணமாக எழுந்துள்ள அசௌகரியங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் காணிகளுக்கு சுரங்கம் அகழ்வதற்கு அனுமதி பத்திரங்கள் வழங்கும் கட்டணத்தை குறைத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள வயல் காணிகளை சுரங்கம் அகழ்வதற்காக பயன்படுத்துதல், சுரங்க அகழ்வின் பின்னர் அவற்றை மூடி விடுவதற்கு அத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுரங்கங்களை அகழ்தல் மற்றும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் சுரங்க அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவற்றை மூடாது விட்டு விடுவோரின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சட்ட விரோத அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றி வளைப்புகளின்போது எழும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது நிறுவனமயப்பட்ட ஒழுங்கில் செயற்பட்டு வரும் போலி இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முறையான பொறிமுறை ஒன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, கயந்த கருணாதிலக்க, தயா கமகே, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, நிதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட இரத்தினக்கல், ஆபரணங்கள் துறை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Sharing is caring!