யாதுரிமை எழுத்தாணை மனு மீதான மீள்பரிசீலனை ஒத்திவைப்பு

பிரதமர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை ஆட்சேபித்து ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த யாதுரிமை எழுத்தாணை மனு மீதான மீள்பரிசீலனை எதிர்வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பீ. பத்மன் சுரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று (12) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் உரிய ஆவணங்களுடன் கூடிய அறிவித்தல் பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்படாததால் மனுக்களை நிராகரிக்குமாறு, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் 49 பேர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மனுக்கள் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மன்றில் தாக்கல் செய்யுமாறு குறிப்பிட்டனர்.

இதேவேளை, பதில் மனுக்களை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்த பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!