ரஞ்சனின் குரல்பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்க நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திடம் ஒப்படைத்த குரல் பதிவுகளை அடுத்த வாரமளவில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குரல் பதிவுகள் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த செயற்பாடு நிறைவடைந்த பின்னர் அடுத்த வாரமளவில் அவை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று (12) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அரச கொடுப்பனவு தொடர்பான நிதி கொள்கைகள் பற்றி இந்த மாதம் 20 ஆம் திகதி விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் அன்றைய தினமே சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் எயார் பஸ் கொள்வனவு தொடர்பில் விளக்கமளிக்க ஸ்ரீலங்கன் விமான நிறுவன அதிகாரிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!