ரணில் பதவியிலிருந்த போது கடுமையாகவும் தனித்தும் முடிவுகள் எடுத்தார்

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது கடும் பிடிவாதமாக இருந்தார். கூட்டாக முடிவெடுப்பதைத் தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். இந்த அணுகுமுறை பல முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றன. பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளும் தலைதூக்கின. என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. இந்த அரசியல் பிரச்சினைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினாலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து புதிய அரசை அமைத்தேன். இதைவிட எனக்கு வேறு மாற்றுவழி இருக்கவில்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“நாட்டின் அரசமைப்பின் பிரகாரமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினேன். இந்த விடயத்தில் ஜனநாயகத்தை மீறும் வகையில் எதையும் செய்யவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதியதொரு தலைவர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிந்திக்கவேண்டும்” எனவும் அறைகூவல் விடுத்தார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அப்பதவியை வழங்குவதற்கு வழிவகுத்த காரணிகள் எவை என்பது உட்பட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி நேற்று மாலை விசேட உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி எனக் கூறப்பட்டாலும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையான முடிவுகளை எடுப்பவராகவே செயற்பட்டார். சாதாரண மக்களின் மனோநிலையை அவர் புரிந்துகொள்ளவில்லை. பிரபுக்களுக்குரிய அதிசொகுசு வாழ்க்கை பற்றியே அவரும், அவருக்கு நெருக்கமான சகாக்களும் சிந்தித்தனர். இதனால், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளும் தலைதூக்கின. அவற்றுக்கு உரிய தீர்வுகள் காணப்படவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்ற பின்னர், விசாரணை விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட விதம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நான் மத்திய வங்கிக்கு செல்ல முற்பட்டவேளை, எனது வீட்டுக்கு ஓடோடி வந்த ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியானது பிரதமரின் கீழ் இருப்பதாக வாதிட்டார்.

எனவே, மத்திய வங்கியின் முன்னா ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டியது அவரின் பொறுப்பாகும்.

என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்யப்பட்டது என நாமல் குமார் என்ற நபர் தகவல் வெளியிட்டார். அது தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தும் அது மாற்றப்பட்டது. குரல் பதிவு குறித்து விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே அதில் சந்தேகம் இருக்கின்றது என பொலிஸ்மா அதிபர் அறிவித்துவிட்டார். விசாரணைக்குப் பல வழிகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. கொலை முயற்சியின் பின்னணியில் அமைச்சர் ஒருவரும் செயற்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

என்னை ஜனாதிபதியாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பதற்காக விட்டுக்கொடுப்புகளை செய்தேன். பின்நோக்கி நகர்ந்தும் பார்த்தேன். ஆனால், எனக்கும், ரணிலுக்கும் இடையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ரீதியில் பொருத்தங்கள் ஏற்படவே இல்லை. இப்படி மேலும் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி புதிய ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். இதைவிட எனக்கு வேறு மாற்றுவழி இருக்கவில்லை. எனவே, நாட்டின் நலனுக்காகவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் புதிய அரசில் இணையுமாறு நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

அதேவேளை, சட்டநிபுணர்களின் ஆலோசனை நடத்திவிட்டு, ஜனநாயக முறைப்படியே மாற்றத்தை ஏற்படுத்தினேன். எனவே, ஜனநாயகத்துக்கு எதிராகவும், அரசமைப்பை மீறும் வகையிலும் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்” – என்றார்.

Sharing is caring!