”ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?”

“நாடாளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஐனநாயக முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். ஆனால், செயற்படுத்தப்பட்ட முறைதான் கேள்விக்குறி. ஆனால், பிரதமரை நீக்குவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆனால், அந்தச் சட்டத்தின் பிரகாரம் சிங்கள முறையில் உள்ள அடிப்படையில் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றதென இன்னொரு தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே அரசமைப்பை மீறிப் பிரதமர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அதிலும் அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், ஏன் இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை என்ற கேள்வி இருக்கின்றது. அதேநேரம் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதென்றால் அந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு யாரும் ஆதரவோ அல்லது ஒத்ழைப்போ வழங்கலாம்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும். நாடாளுமன்றத்தை விரைவாகக் கூட்டவேண்டுமென்பது நியாயமானது. அதன் பின்னர் வாக்கெடுப்பு என்ற ஒன்று வருகின்றபோது யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுகையில் தான் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இன்று மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குச் சில நிபந்தனைகளை விதித்த கூட்டமைப்பு அதற்கு அவர் சம்மதிக்காததால் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாயின் அவரிடம் முன்வைத்த நிபந்தனைகள் என்ன? எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன? உறுதிமொழிகள் பெறப்பட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்டபோது கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இருந்தும் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்தவுக்கு நிபந்தனையை கூட்டமைப்பு விதித்தது என்றால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏன் விதிக்கவில்லை?

யாருக்கு ஆதரவு வழங்குவதென்றாலும் உறுதிமொழியை எடுக்க வேண்டும். முன்னர் கிடைத்த சந்தர்ப்பத்தில் விட்ட தவறை இப்ப கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்திலும் விடக் கூடாது” – என்றார்.

Sharing is caring!