ரணில் விக்ரமசிங்கவை தமக்கு முன்பாக அழைத்துவர வேண்டாம் – ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவை தமக்கு முன்பாக அழைத்துவர வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமது வாழ்நாளில் அவரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியதாக, AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பாரதூரமான ஊழல் காரணமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியதாகவும் உணர்ச்சி வசத்துடன் ஜனாதிபதி கூறியதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள தனிப்பெரும் அரசியல் கட்சியின் தலைவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் அல்லவா என ஊடகவியலாளர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் வினவியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தமது சம்பிரதாயத்திற்கு அமைவாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் பிரதமர் பதவியில் அமர்த்தும் நபர், தம்முடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதே அந்த சம்பிரதாயம் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் தம்மால் இணைந்து செயற்பட முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஒருவரை அழைத்துவர முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் கீழ், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அது குறித்து ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!