ரயில் பெட்டிகளை இரும்பிற்காக வெட்டும் பணிகள் நிறைவுக்கட்டம்

யாழ். காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் பல வருடங்களாகத் தரித்து வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளை இரும்பிற்காக வெட்டும் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன.

உரிய விலை மனுக்கோரலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 ரயில் பெட்டிகளை இரும்பிற்காக விற்பனை செய்ய 2013 ஆம் ஆண்டு விலை மனு கோரப்பட்டது.

பாவனைக்கு உதவாத ரயில் பெட்டிகளுக்கே இவ்வாறு விலை மனு கோரப்பட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளில் வெட்டப்படும் இரும்புகளின் தொகை அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக அரச வரியுடன் 11.3 மில்லியன் ரூபாவிற்கு இவற்றை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ரயில் பெட்டிகளை இரும்புக்காக வெட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து 1987 ஆம் ஆண்டு காங்கேசன்துறைக்கு சென்ற ரயிலின் பெட்டிகள் இதுவரை காலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் காரணமாக ரயில் மார்க்கங்கள் சேதமடைந்ததை அடுத்து போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாது போனமையால் இந்த ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடியாது போனதாக ரயில்வே திணைக்கம் குறிப்பிட்டது.

பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட இந்த ரயில் பெட்டிகளை உரிய விலை மனுக்கோரலுக்கு அமைய இரும்புக்காக விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!