ராஜபக்ஷ ஆதரவு அரசியல் தலைவர்கள் கொழும்புவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.க எம்.பி. ஒருவரும் பங்கேற்றார்.

ராஜபக்ஷவை பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்ததை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை ஒட்டி, ராஜபக்ஷ ஆதரவு அரசியல் தலைவர்கள் கொழும்புவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஒருவரும் பங்கேற்றார்.

ஆனந்த அலுத்த மகே என்ற அந்த எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 20 எம்.பி.க்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லை என்பதால் எந்தக் கட்சியில் வெற்றி பெற்ற எம்.பி.யும் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்கத் தடையில்லை என்கிறார் செய்தியாளர் ஒருவர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை தொழிலாளர் கட்சித் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கள் கட்சி ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்தார். அந்தக் கட்சிக்கு 2 எம்.பி.க்கள் உள்ளனர்.

ரணில் பிரதமர் அல்ல என்று கூறப்பட்டாலும், அவர்தானே பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருக்கிறார் என்று கேட்கப்பட்டபோது, “அவருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரைதான் அவகாசம். அவராக மரியாதையாக அலரி மாளிகையை காலி செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்ஷ ஆதரவு எம்.பி. விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

Sharing is caring!