ரீயூனியன் தீவுக்கு படையெடுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் நோக்கி படகில் பயணிக்கும் நிலை தற்போது மாற்றமடைந்துள்ளது.

ரீயூனியன் தீவை சென்றடைந்து, அங்கு புகலிடம் கோருவதற்கு பலர் முயல்கின்றனர்.

ரீயூனியன் தீவு பிரான்ஸிற்கு சொந்தமானது.

இலங்கையிலிருந்து சுமார் 4,230 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இந்தத் தீவை சென்றடைவதாயின் சுமார் 20 நாட்கள் படகில் பயணிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்ற இலங்கையர்கள் 64 பேர் பெப்ரவரி 14 ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்டனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரே மூன்று பிள்ளைகளின் தந்தையான அருள்குமார்.

அருள்குமார் தனது பயணம் பற்றி தெரிவித்ததாவது,

வெளிநாட்டிற்கு போய் வாழ்ந்து, பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு தான் காசு சேர்த்துக் கொடுத்தோம். ஆனால், திருப்பி அனுப்பி விட்டார்கள். நம் நாட்டை எங்கேயும் கொச்சைப்படுத்தக்கூடாது. அதற்காக நாங்கள் பொய் சொல்லவில்லை. நாங்கள் வேலை இல்லாமல் தான் வந்ததாகக் கூறினோம்.

மிக இரகசியமாக, தகவல் கசிவின்றி முன்னெடுக்கப்படும் இந்தப் பயணம் மிக மிக அபாயகரமானது என ரீயூனியனிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

இறுதியாக ரீயூனியன் தீவை சென்றடைந்த ”ஜே பிரஷங்ஸா” எனும் பெயருடைய படகின் உரிமையாளரான சிலாபத்தைச் சேர்ந்த மீனவர் சுதர்ஷன பெரேராவை சந்தித்து வினவிய போது, தமது படகு திருடப்பட்டு ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Sharing is caring!