ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்த நாணய மாற்று வீதத்திற்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 171 ரூபா 42 சதமாக அமைந்திருந்தது.

இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 153 ரூபாவாக இருந்ததுடன், இன்று வரை அந்த பெறுமதி சுமார் 17 ரூபாவால் அதிகரித்து தற்போது 171 ரூபாவைக் கடந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ரூபாவின் பெறுமதி சடுதியாகக் குறைவடைந்து வருவதுடன், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தமது கையிருப்பில் இருந்த பணத்தைக்கூட புழக்கத்திற்கு விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

184 மில்லியன் டொலர் கையிருப்பைப் புழக்கத்திற்கு விட நடவடிக்கை எடுத்ததாக மத்திய வங்கி நேற்று முன்தினம் (02) அறிவித்தது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அரசாங்கத்தின் குறுங்கால செலவீனங்களை ஈடு செய்வதற்காக மத்திய வங்கி நேற்று மேற்கொள்ளவிருந்த திறைசேரி உண்டியல் ஏலத்தை இடைநிறுத்தியது.

அரச ஊழியர்களின் சம்பளம், எரிபொருள் போன்ற அன்றாட குறுங்கால செலவுகளை ஈடு செய்வதற்காக மூன்று மாதங்கள் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்தில் நிறைவுபெறும் வகையில் திறைசேரி உண்டியல்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியல்கள் விநியோகத்தின் மூலம் 6000 மில்லியன் ரூபா குறுங்கால கடன் வசதியை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுக்க தயாராகியிருந்தது.

இதில் 2000 மில்லியன் ரூபா மூன்று மாதங்களில் முதிர்வடையும் வகையிலும், மேலும் 4000 ரூபா ஒரு வருடத்தில் முதிர்வடையும் நிலையிலும் திறைசேரி உண்டியல்களை விநியோகிப்பதே மத்திய வங்கியின் திட்டமாகும்.

எனினும், திறைசேரி உண்டியல் கொள்வனவுக்கான ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட வட்டி வீதம், மத்திய வங்கி உத்தேசித்திருந்த அளவைக் கடந்திருந்ததால் இந்த 6000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், 6000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் போது 13,922 ரூபாவுக்கான கேள்விப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மூன்று மாதங்களில் முதிர்வடையும் திறைசேரி உண்டியலுக்காக 8.56 வீதமும் ஒரு வருடத்தில் முதிர்வடையும் திறைசேரி உண்டியலுக்காக 9.05 வீத வட்டியையும் வழங்கி இலங்கை மத்திய வங்கி இறுதியாக திறைசேரி உண்டியல்களை விநியோகித்திருந்தது.

இலங்கையின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள வியட்நாம் முறையான முகாமைத்துவத்தால் சிறந்த பொருளாதார வேகத்தை அடைந்துள்ளது.

உலக வங்கியின் எதிர்வுகூறலுக்கு அமைய, வியட்நாம் இந்த வருடத்தில் 6.7 வீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 வீதமாக அமைந்திருந்தது.

எவ்வாறாயினும், வியட்நாம் பாராளுமன்றம் 12 அம்ச செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. அதன் ஊடாக 8 வீத பொருளாதார வளர்ச்சியை 5 வருடங்களுக்குள் அடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்கள் இந்த வருடத்திற்குள் மாத்திரம் உற்பத்தித்துறையை 12.65 வீதத்தால் விருத்தி செய்துள்ளதுடன், சேவைத்துறையையும் 9.98 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் வியட்நாமின் ஏற்றுமதி 179 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தகப் போர் மேலும் விரிவடைந்துள்ள நிலையில், வியட்நாம் தமது நிதிக்கொள்கை, நாணய மாற்று வீதம், வட்டி வீதம் மற்றும் பண வீக்கத்தை முறையாக முகாமைத்துவப்படுத்தி சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றது.

அமெரிக்காவின் வரிக்கொள்கை காரணமாக சீனாவிடமிருந்து வெறியேறும் முதலீடுகளை குறைந்த தொழில்நுட்பம் மற்றும் சிறு அளவிலான திட்டங்களுக்காக வியட்நாம் ஈர்த்துக்கொள்கின்றது.

Sharing is caring!