வடக்கில் தனி இராஜ்ஜியம்! – கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்குமளவுக்கு நிலைமை படுமோசமென மகிந்த சீற்றம்

வடக்கு மாகாணமானது தனியானதொரு இராஜ்ஜியமாகவே இயங்கிவருவதாகவும், அங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே.இந்திகவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் யாழில் கரும்புலி தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

“வடக்கில் எதைச் செய்தாலும் பிரச்சினையில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது. காரணம், அது தனி இராஜ்ஜியம்போலவே செயற்பட்டுவருகின்றது. தெற்கில் சம்பவங்கள் நடந்ததால்தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வடக்கில் அவ்வாறு சட்டம் கம்பீரமாக செயற்படுவதில்லை. இதனால்தான் கரும்புலிகள் தினத்தைக்கூட அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது” என்றும் மஹிந்த கூறினார்.

அத்துடன், ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மஹிந்த, “அர்ஜூன் மகேந்திரன் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால், மறுதினமேன் நான் அறிவிப்பு விடுப்பேன்” என்றார்.

Sharing is caring!