வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போதைப் பொருள் பாவனை ஆதிக்கம்

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் என்றுமில்லாதவாறு அதிகளவில் போதைப் பொருள் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப் பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் சபைக் கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.

இந்த பாவனை வடக்கில் அத்தியவசிய உணவு போல் பழகிவிட்டது. மலையக மக்கள் எவ்வாறு கோதுமை மாவில் ரொட்டியை ஆரம்ப உணவாக உட்கொள்கிறார்களோ அதேபோல் வடக்கில் கஞ்சாவின் பாவனை அதிகரித்துள்ளது.

இதேபோல் மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என அச்சமாக உள்ளது. போதைபொருளின் பாவனை மலையகத்தில் அதிகரித்து விட்டால் போதைபொருள் பழக்கத்திலிருந்து மலையகத்தை மீட்டெடுப்பது பாரிய கஷ்டமாகும்.

இதேபோன்று பதுளையில் போதைபொருள் பாவனை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளும் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளனர். பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் இவ்வாறான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக அறிந்தேன்.

இதனால் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒருபோதும் துணையாக இருக்க கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Sharing is caring!