வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மொழி பேசக் கூடியவராக இருந்தமையால் தமது தேவைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி மூன்று மகஜர்களை யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி தெய்வேந்திரம் சுகுணரதியிடம் கையளித்தனர்.

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதற்கு முன்னரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!