வடபகுதி மீனவர்கள் அரசாங்கத்தினை முடக்கும் வகையிலான போராட்டத்தினை முன்னெடுப்போம்

வடபகுதி மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சு பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரும், மீனவர்களின் கோரிக்கைகளிற்கு உத்தரவாதம் வழங்கிய பின்னர் இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடாத்தாது படகுகளை விடுவிக்க முயன்றால், வடபகுதி மீனவர்கள் அரசாங்கத்தினை முடக்கும் வகையிலான போராட்டத்தினை முன்னெடுப்போம் என வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.

வடபகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையினால், அந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை 28 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய இழுவைப் படகுகளின் விடுப்புக்கள் என்பது எங்களினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு விடயம். எமது தொழில் வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களினால் எமது கடல்வளங்கள் சுரண்டப்படுவது நிறுத்தவில்லை. தொடர்ச்சியாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், இலங்கை அரசு இந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதில் கரிசனை கொள்கின்றது. 200 ற்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய படகுகளை கையகப்படுத்தும் போது அதன் செலவு 2 மில்லியன் ரூபாவை தாண்டுகின்றது. 200 படகுகளிற்குமான செலவு மிக அதிகமானவை. இந்த செலவுகள் எமது வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகின்றன.

எமது இழப்பும், எமது வரிப்பணமும் இழக்கப்படுகின்றன. எனவே, கையகப்படுத்தப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவர்களினால் அனுமதிக்க முடியாது.

வடபகுதி மீனவர்களினால் நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கையில் ஒன்று, இன்று வரை அரசாங்கத்தினால் நிறைவேறப்படவில்லை. கடந்த மீன்பிடி அமைச்சராக இருக்கட்டும், தற்போதுள்ள கடற்றொழில் அமைச்சராக இருக்கட்டும், யாருமே வடபகுதி மீனவர்கள் மீது கரிசனை கொண்டவர்களாக இல்லை.

மீட்டு வைத்துள்ள இந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதில் காட்டும் கரிசனையினை, வடபகுதி மீனவர்கள் படும் அவலங்களில் கரிசனை காட்டவில்லை.

இந்திய இழுவைப் படகுகள் விடுவிக்கப்படுமானால், வடபகுதி மீனவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், வடபகுதி மீனவர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே இந்திய இழுவைப்படகுகளை விடுவிப்பதில் சாத்தியமாகும்.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தாமல் படகுகள் விடுவிக்கப்படுமாயின் வடபகுதி மீனவர்கள் பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம்.

இந்த போராட்டம், அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டமாக முன்னெடுக்கப்படுமென்றும், வடபகுதியில் உள்ள 50 ஆயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் மக்களையும் வீதியில் இறக்கி போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

Sharing is caring!