வடபிராந்திய இ.போ.ச இணைந்த தொழிற்சங்கம் 14 நாட்களுக்குள் பணிப்புறக்கணிப்பு

வடபிராந்திய இ.போ.ச இணைந்த தொழிற்சங்கம் 14 நாட்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கத்தவறினால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ள தாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்வருடம் 01.01.2018 தொடக்கம் 05.01.2018 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற இ.போ.ச வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் முடிவில் எங்களுடைய கோரிக்கைகள் எற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் எங்களுடைய கோரிக்கைகளுக்கு அமைவாக இன்றுவரை புதிய பேருந்து நிலையத்தில் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயலாற்ற முடியாதவாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா நிர்வாகத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி எமது மக்கள் சேவைக்கு இடையூறாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக எமக்கு எதிராக சில பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் எமக்கெதிராக பொய்யான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்கின்றன.

இதனால் இ.போ.ச வை முடக்க முனைகின்றார்கள்.இ.போ.ச விற்குத் தரப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் எமது தலைமைக் காரியாலயத்தின் கீழுள்ள நிர்வாகத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்.

04.01.2018 அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் இ.போ.சவின் தூரசேவை பேருந்துகள் உள்நுழையக்கூடாது எனும் தீர்மானம் ஏழு சாலை முகாமையாளர்களுக்கோ ஏழு சாலை தொழிற்சங்கங்களுக்கோ தெரியப்படுத்தாது கலந்துரையாடாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு ஒப்பமிட்டுள்ளார்கள்.

இதன் காரணத்தினால் இ.போ.சவின் தூர சேவை பேருந்து குழுவினர் மக்களுக்கான சிறந்த பேருந்து சேவையை ஆற்ற முடியாது பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மேற்படி கூட்டத்தில் இ.போ.ச தலைமைக்காரியாலய பிரதிப் பொது முகாமையாளர் செயலாற்று மற்றும் வடபிராந்திய முகாமையாளர் செயலாற்று ஆகியோரோடு வடமாகாண முதலமைச்சர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடனான கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்பம் கைச்சாத்திடப்பட்டது.

இம் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் தூர சேவைகளுக் கென புதிய சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக வவுனியா சாலைக்கு எதிராக பல பொய்யான குற்றச்சாட்டுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று முன்னாள் தலைவர் திரு. வாமதேவன் நான்காம் மாதம் சுயவிருப்பில் விடுமுறையில் சென்றவரை ஏழாம் மாதம் கடமையில் இருந்ததாகக்குறிப்பிட்டு குற்றப்பத்திரம் தயாரித்தமை.

மேற்படி எமது கோரிக்கைகள் நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் மக்களுக்கான சிறந்த சேவையாற்ற முடியாது என்பதையும் எமது ஊழியர்களுக்கான சம்பள வேதனத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை கருத்திற்கொண்டு எங்களுக்கான தீர்வினை பதின்நான்கு நாட்களுக்குள் பெற்றுத்தரத்தவறும் பட்சத்தில் நாங்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்பதை மிகவும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் பிரதிதலைவர், பிரதிப் பொது முகாமையாளர், தொழிற்சங்கத்தலைவர்கள், பிரதான பிராந்திய முகாமையாளர், அரசாங்க அதிபர், பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Sharing is caring!