வட மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியக் களை

வட மாகாணத்தின் பல பகுதிகளை பார்த்தீனியம் களை ஆக்கிரமித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் மாத்திரம் 20,000 ஏக்கருக்கு மேல் பரவியுள்ள பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உரிய பொறிமுறை இல்லை என மக்கள் குறிப்பிட்டனர்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பார்த்தீனியக் களை அதிகளவில் பரவி வருகின்றது.

குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கோப்பாய், உரும்பிராய், நீர்வேலி, அச்சுவேலி, ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களை பார்தீனியக் களை ஆக்கிரமித்துள்ளது.

Parthenium Hysterophorus என்ற தாவரவியல் பெயரினைக் கொண்ட இந்த செடி, இந்திய இராணுவத்தினரின் வருகையுடன் பரவியதாக விவசாய துறைசார் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம் காணப்படுகின்றது.

விவசாயப் பயிர்களை அழித்து ஆக்கிரமித்து வளரக்கூடிய தன்மையுள்ளமையால், இந்த களை பரவும் இடத்தில் பயிர்செய்கை பண்ணமுடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

பார்த்தீனியம் களையொன்று சுமார் 10,000 தொடக்கம் 15,000 வரையிலான விதைகளை வௌியிடுவதுடன் அந்த விதைகள் நீண்டகால வாழ்தகமை கொண்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னாங்காணியும் பார்த்தீனியமும் ஒரே வடிவத்தில் காணப்பட்டாலும் விவசாயிகள் விரைவில் பார்தீனியத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பார்த்தீனிய களையை ஐந்து வருடங்களுக்குள் இல்லாதொழிக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு அப்போதைய வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியளிக்காத நிலையில் இடைநடுவில்
கைவிடப்பட்டது.

பார்த்தீனியக் களை பரவுவதைத் தடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ள போதிலும் , அதிகாரிகள் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு இன்மையால் அதனை முற்றாக ஒழிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

Sharing is caring!