வன்முறைகளைத் தவிர்த்து அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

வன்முறைகளைத் தவிர்த்து அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறு இலங்கை கட்சிகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றம் குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான ஜெனிவாவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி, மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தமது பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு முரணானது என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தி வருகின்றார்.

ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் இன்று அதிகாலை வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய தமது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளார்.

Sharing is caring!