வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரோம் நோக்கி பயணமானார்

ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரோம் நோக்கி பயணமானார்.

பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்ளும் பொருட்டு வனங்களின் பங்களிப்பை அதிகரித்துக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பிலான புதிய பரிந்துரைகள் மற்றும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் அடைவு தொடர்பில் உறுப்பு நாடுகளிடையே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (16) விசேட உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!