வரவு செலவுத்திட்டம் 2019

மக்களை வலுவூட்டல், வறிய மக்களை பாதுகாத்தல், என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தேசிய அரசாங்கம் முற்றுப்பெற்றதை அடுத்து ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள்

ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஓய்வூதிய சம்பள முரண்பாடுகளை நீக்கி, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிக நன்மை கிடைக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிதாக இல்லற வாழ்வில் இணைவோருக்கு HOME SWEET HOME வீடமைப்பு கடன் திட்டத்தின் ஊடாக 6 வீத வட்டிக்கு 25 வருடங்களில் செலுத்தக்கூடிய வகையில் 10 மில்லியன் கடனுதவி

வௌிநாட்டுப் பணியாளர்களுக்கு கனவு மாளிகை எனும் பெயரில் 10 மில்லியன் ரூபா வீட்டுக் கடன் திட்டமொன்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட சலுகைக் காலத்துடன் 15 வருடங்களில் அதனை செலுத்த முடியும்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர 11 இலட்சம் ரூபா அதிகபட்சம் வரை வட்டியற்ற கடனுதவி

இலத்திரனியல் முச்சக்கரவண்டி மற்றும் சிறியரக கார்களை கொள்வனவு செய்யும் கடனின் 75 வீத வட்டியை அரசாங்கம் பொறுப்பேற்பதாக பிரேரிக்கப்பட்டுள்ளது

CITY RIDER கடன் திட்டத்தின் கீழ் தனியார் பிரிவுக்கு 1000 சொகுசு பஸ்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம்

குத்தகை அடிப்படையில் பிரதானமான நான்கு ரயில் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடுகின்ற ரயில் பெட்டிகளை தனியார் துறையினருக்கு வழங்கத் திட்டம்

பொதுமக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இறப்பர், தெங்கு கைத்தொழில் துறைகளின் மேம்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை

துறைமுக புனர்நிர்மாணத் திட்டத்தின் கீழ் நங்கூரத்தளம் மற்றும் இறங்குதளங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 1,300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் புதிய துறைமுகங்களை அமைக்கவும் மண்டைத்தீவில் நங்கூரத்தளத்தினை அமைக்கவும் யோசனை.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக பசும்பால் வழங்கத் திட்டம்

நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பொது இடங்களில் கழிவறை வசதிகளை மேம்படுத்தி அதனை பராமரிப்பதற்கான பொறுப்பை தனியார் துறையிடம் ஒப்படைக்க யோசனை

அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய உத்தேசம்

விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை அதிகரிக்கத் திட்டம்

தனியார் துறையின் பெண் ஊழியர்களுக்கு மூன்று மாத மகப்பேற்று விடுமுறையை வழங்குவதற்கான ஊக்குவிப்புகளை ஏற்படுத்தவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் நகர, கிராமிய, பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 24,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அத்தோடு, 2019 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15,000

செங்கற்களினாலான வீடுகளை நிர்மாணிக்க மேலதிகமாக 5500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கிலிருந்து வௌியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள குடியமர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் காங்கேசன்துறை, மாந்தை கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கின்னியா, சம்மாந்துறை மற்றும் திருகோணமலையில் கைத்தொழில் பேட்டைகள்

சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில், வௌிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்ளும் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களை தேச நிர்மாண வரியில் இருந்து விடுவிக்கத் திட்டம்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 32 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

நான்கு இலட்சம் அமெரிக்க டொலருக்கு அதிகமாக கூட்டு ஆதனங்களில் முதலீடு செய்துள்ள வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு மூன்று வருட வதிவிட விசா வழங்கப்படவுள்ளது

ஊவா, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களில் ஆரம்ப சுகாதார நல அலகுகளை ஸ்திரப்படுத்தும் நோக்குடன் 1625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அறுவைக்காடு கழிவகற்றல் திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகரின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு

யாழ். பழைய மாநகர சபை கட்டடத்தை மீள புனரமைக்க 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கல்முனை, சம்மாந்துறை, வாழைச்சேனை மற்றும் தலைமன்னார் நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் ஒத்துழைப்பு

மாலம்பே மற்றும் கொழும்பு – கோட்டையை இணைக்கின்ற கொழும்பு நகர இலகு ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பிரதமரின் செயலகத்தில் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தின் மூலம் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

காணாமற்போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 5000 மில்லியன் ரூபா முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக ”பனை நிதியம்” அமைக்கத் திட்டம்

மன்னார் கட்டுக்கரை குளத்தை புனரமைக்கத் திட்டம்

வடக்கு மற்றும் கிழக்கில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட அல்லது அழிவுற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் போன்ற வசதிகளை வழங்குவதற்குமாக 2000 மில்லியன் ஒதுக்கீடு

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொண்ட சிறு நிதி கடனில் 2018 ஜூன் மாதத்திலிருந்து ஆகக் குறைந்தது மூன்று மாதங்களின் நிலுவையை விலக்களிக்க நடவடிக்கை

2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி மற்றும் உற்பத்தி தீர்வை திருத்தம்

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மேலும் 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மடு திருத்தலத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

அதிவிசேட சாராயத்தை தவிர்ந்த ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு

Sharing is caring!