வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றோ (13) அல்லது நாளையோ (14) வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

இந்த தீர்ப்பு தொடர்பிலும் தீர்ப்பின் பின்னரும் ஏற்படப் போகும் நிலைமை தொடர்பிலும் பல்வேறு மட்டத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்து முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இரு விதத்தில் வர இடம்பாடுள்ளது. ஒன்றில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது எனவும், இன்றேல் சட்ட ரீதியற்றது எனவும் வரப் போகின்றது. சட்ட ரீதியானது என தீர்ப்பு வருமாக இருந்தால் தேர்தல் ஒன்று வரும்.

சட்ட ரீதியற்றது என்ற தீர்ப்பு வழங்கப்படுமாக இருந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் பாராளுமன்றம் வழமை போன்று நடைபெறும். இருப்பினும், இதன்போது சட்ட சபைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் கருத்து முரண்பாடு உருவாகும். இந்தப் பிரச்சினையை சீர் செய்ய ஜனாதிபதிக்கு ஒரேயொரு சந்தர்ப்பம் அரசியல் யாப்பில் உள்ளது.

அதாவது, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 85 ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் பிரகாரம், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியும். இதன்போது, பொதுத் தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா? என பொது மக்களிடம் கோர முடியும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கு கேள்வி கேட்க முடியாது. சர்வஜன வாக்கெடுப்பு குறித்து 19 ஆவது திருத்தச் சட்டத்திலும் எந்தவொரு வரையறையும் ஏற்படுத்தப்படவில்லை.

இதேவேளை, உயர் நீதிமன்றம் தற்பொழுதுள்ள பாராளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்த விசாரணையின் போது, சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க முடியும். இருப்பினும், உயர் நீதிமன்றத்தினால் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லுமாறு தீர்ப்பு வழங்க முடியாது எனவும் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசாரணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது. இருப்பினும், தீர்ப்பு வழங்கும் தினம் குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவை தொடர்ந்தும் நீடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Sharing is caring!