வறட்சியின் கொடுமையால் கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன

நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் செய்யவேண்டியவற்றைச் செய்துள்ளோம்.

மேலதிக நடவடிக்கைகள் பற்றிய திட்டங்கள் எதுவும் அதிகாரிகளிடம் இல்லை அவர்களே கூறுகின்றனர்.
நெடுந்தீவில் இதுவரை 10 குதிரைகள் உயிரிழந்துள்ளன என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலேயே குதிரைகள் காணப்படுகின்றன. இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் அவற்றைப் பார்த்துச் செல்கின்றனர்.
குதிரைகளை அழிவிலிருந்து காப்பற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை .

இதன் விளைவாக நாளாந்தம் ஒரு குதிரை வீதம் உயிரிழந்து – அழிந்து கொண்டிருக்கின்றது. குதிரைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், அவற்றைப் பேணவும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
நெடுந்தீவுப் பகுதியில் குதிரைகளுக்கான லயம் காணப்படுகின்றது. தற்போதைய வறட்சியைக் குதிரைகள் எதிர்கொள்ளமுடியாது அந்தரித்துத் திரிகின்றன. மேய்ச்சலுக்குப் புல் இல்லாததோடு குடிப்பதற்குப் போதிய தண்ணீரும் இல்லாததால் இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் உயிரிழந்துள்ளன.

எனவே, அரச திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குதிரைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

”நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் ஊடாகக் குதிரைகளுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போதைய வறட்சி காரணமாக அண்மைய நாள்களாகக் குதிரைகள் இறந்துகொண்டிருக்கின்றன. தண்ணீரை மட்டும் குடித்து அவை உயிர் வாழமாட்டாதவை. குதிரைகளுக்குத் தேவையான புற்கள் இல்லை. இதுவே முதன்மைப் பிரச்சினையாக உள்ளது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்று நெடுந்தீவு பிரதேச சபைச் தவிசாளர் ரொஸாந் தெரிவித்தார்.

“நெடுந்தீவில் உள்ள குதிரைகளுக்குத் தண்ணீர் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றுக்கான புற்கள், உணவுகள் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை . இதனால் குதிரைகள் இறக்கின்றன. அதுமட்டுமல்லாது வயது முதிர்ந்த குதிரைகள் இறந்து கொண்டிருக்கின்றன” என்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
”நெடுந்தீவில் வறட்சி காரணமாகக் குதிரைகள் மட்டும் பாதிப்படையவில்லை .

இங்கு வாழ்கின்ற ஆயிரத்து 428 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குக் குடிதண்ணீரை தாரப்பிட்டியிலிருந்து எடுத்துவந்து விநியோகிக்கின்றோம். ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் குடிதண்ணீர் இல்லாத ஆபத்துக்கு வரலாம் என்ற ஆபத்து உள்ளது. நாம் மாவட்டச் செயலகத்தின் ஊடாக வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றோம். ஆனால் அங்குள்ள ஏனைய மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில் உள்ள குதிரைகளில் வயது முதிர்ந்த குதிரைகள் வறட்சியைத் தாங்க முடியாது உயிரிழந்துள்ளன.

அதுமட்டுமல்லாது தற்போது உள்ள குதிரைகளும் தண்ணீரை மட்டும் குடித்து வாழ்வதால் மெலிந்த நிலையில் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. வறட்சியால் குதிரைகள் மட்டுமல்லாது மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதுவரையில் 15 மாடுகள் இறந்துள்ளன. மழை இல்லாத நிலைமை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும்” என்று நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

Sharing is caring!