வவுச்சர் முறைமையினூடாக சீருடை

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சர் முறைமையினூடாக சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுச்சர் முறைமையினூடாக பாடசாலை சீருடைகளை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

இதற்காக கல்வியமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பான தீர்வை உடனடியாக பெற்றுத்தருமாறு குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த வருட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களுக்கு இந்த மாதத்தில் சீருடை அல்லது அதற்கான வவுச்சர்களை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வருடத்தில் பல சந்தர்ப்பங்களில் பாடசாலை சீருடைகளை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இப்போதேனும் நிறைவேற்றுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sharing is caring!