வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடியணிந்து வந்த ஐவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

44 வயதான ஆணொருவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது வீட்டிலிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் நிலைத்திலிருந்து சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கிடையிலான தூரம் சுமார் 600 மீட்டராகக் காணப்பட்டபோதிலும், பொலிஸார் இன்று காலையே சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததாக வீட்டுரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவத்தில் காயப்பட்டவர் முச்சக்கரவண்டியில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்ததாகும், அவர் வைத்திய சாலைக்கு செல்வதற்கு பொலிஸ் வாகனம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், சம்பவ இடத்திற்கு செல்வதற்கு தாமதமாகியதாகவும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring!