வித்தியா கொலை வழக்கில் விடுதலையாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் விளக்கமறியல் நீடிப்பு

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிறிதொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸ் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையால் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவுபெறவில்லை என தெரிவித்த பொலிஸார் விரைவில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் சார்பில் முதற்தடவையாக சட்டத்தரணி ஒருவர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

எனினும், சந்தேகநபரின் குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியைக் கருத்திற்கொண்டு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தான் தவறிழைக்கவில்லை என தெரிவித்த சந்தேகநபர் தன்னை விடுவிக்குமாறு ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் இருப்பதால் தனது மனோநிலை பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் சந்தேகநபர் மன்றிற்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் தண்டனை அனுபவித்துள்ளதாகத் தெரிவித்த நீதவான், தொடர்ந்தும் நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக விடுதலை செய்யப்பட்ட குறித்த சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையின்படி கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!