விவசாயக் காணிகளை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தல்: சந்தனவெட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு

தமது விவசாயக் காணிகளை விட்டு வௌியேறுமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அச்சுறுத்துவதாக திருகோணமலை – மூதூர், சந்தனவெட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டைப்பறிச்சான் தெற்கு சந்தனவெட்டை பகுதியிலுள்ள 63 ஏக்கர் காணி 1972 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு முதல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மக்கள், யுத்தம் காரணமாக 1985 ஆம் ஆண்டு வௌியேறி மீண்டும் 2009 ஆண்டு முதல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த காணியில் சோளம், நிலக்கடலை போன்ற பயிர் செய்கையை முன்னெடுக்கும் இந்த மக்களை, அங்கிருந்து வௌியேறுமாறு கடந்த வாரம் வன ஜீவராசிகள் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மூதூர் மலை அடிவாரத்தை அண்மித்த பகுதியில் சந்தனவெட்டை கிராமம் அமைந்துள்ளமையால், மலையில் கல் உடைக்கும் வௌியூர் ஒப்பந்தக்காரர்கள் கற்களைக் கொண்டு செல்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக அங்கிருந்து தம்மை வௌியேற்ற முயற்சிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வன பரிபாலன திணைக்களத்தின் மூதூர் பகுதி வன அதிகாரி ஆர். தவராஜாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

குறித்த காணி தொடர்பில் மக்களிடம் ஆவணங்கள் இருப்பின், அதனை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

Sharing is caring!