வெற்றி உறுதியென கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பொதுக்கூட்டமொன்று மாத்தறையில் இன்று நடைபெற்றது.

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமது பிரஜாவுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கோட்டாபய ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.

எதிர்தரப்பினர் தோல்வியை எதிர்நோக்கியுள்ளமையால், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேறு பூசும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இன்றைய நாளுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் திஸ்ஸமகாராம – வீரவில பகுதியில் இடம்பெற்றது.

வீரவில பகுதியில் நடைபெற்ற இந்த பிரசாரக்கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஸவுடன் கோட்டாபய ராஜபக்ஸ சென்றிருந்தார்.

இதன்போது அரசியல்வாதிகளும், கட்சி ஆதரவாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.

இக்கூட்டத்தில், தமது வெற்றி உறுதியாகியுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக எவ்வித வேலைகளையும் செய்யாது அதிகாரத்தை கோரி மீண்டும் வேலை செய்ய எதிர்பார்க்கும் குழு நாங்கள் அல்லவென்பதை நீங்கள் அறிவீர்கள், எனக்கு வழங்கப்படும் பொறுப்பை 100 வீதம் நான் நிறைவேற்றுவேன். உங்களால் வழங்கப்படும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவேன் என உறுதிமொழி வழங்குவதுடன், அது எனது பொறுப்பு என்பதையும் கூற விரும்புகின்றேன். பாதுகாப்பான, வளமான, அபிமானமிகு தேசமாக நாட்டை மீண்டும் உங்களுக்கு பெற்றுத்தருவேன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்

என கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (12) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.

Sharing is caring!