வெள்ளியிலிருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும் நிலவிவருகின்றது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்ட 3 ஆவது புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நாவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி ஒருபுறம் மஹிந்த ராஜபக்க்ஷவின் நியமனம் சட்டவிரோதமானது என்றும், அது அரசியலைப்பிற்கு முரணானது என்றும் கூறிவருகின்றது. குறித்த நியமனம் சட்டப்பூர்மானது என்றும், ஜனாதிபதியால் புதிதாக பிரதமரை நியமிக்க முடியும் என்றும் புதிய பிரதமர் தரப்பு கூறிவருகின்றது.

இதனால் பெரும்பான்மையாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவடைந்து தற்போது 99 ஆக காணப்படுகின்றது. இதேவேளை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் 101 உறுப்பினர்களை கொண்ட மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதி கூட்டணிக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப்போகின்றது என்பது தொடர்பில் முடிவு இதுவரை எட்டப்பட நிலையில், இருந்தபோதும் அக்கட்சியின் உறுப்பினர் மஹிந்த அணிக்கு தாவியுள்ளார். இதனால் கூட்டமைப்பின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

அதுமட்டுமன்றி மேலும் சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதாவது வியாழேந்திரனுடன் சேர்த்து 3 பேர் மஹிந்த அணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உத்தியோகப்பூர்வமான முடிவுகள் வெளியாகவில்லை.

இருப்பினும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போதே யார் பெரும்பான்மையை நிரூபிக்கப்போகின்றார்கள் என்பது தெரியவரும். ஆனால் அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பிலும் குழப்பமான நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக சில உறுப்பினர்கள் 5 ஆம் திகதி என்றும் சபாநாயகர் தரப்பினர் 7 ஆம் திகதி நடத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறிவரும் நிலையில், மஹிந்த தரப்பினர் இல்லை 16 ஆம் திகதியே நாடாளுமன்றம் நடைபெறும் என கூறிவருகின்றது.

இந்நிலையில் அனைத்து கட்சிகளினதும், குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் முடிவு 16 ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!