வைத்தியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (06) காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வைத்தியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தையின் இதயத்துடிப்பு குறைவடைந்ததை அடுத்து, விசேட மருத்துவப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் தந்தை, பிரசவ விடுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி மற்றும் காவலாளியைத் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring!