ஸ்தலத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை

போக்குவரத்துக் குற்றங்கள் 33 இற்கு ஸ்தலத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுவரை 23 விதிமீறல்களுக்கு மட்டுமே உடனடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், புதிய முறைமையின் கீழ், போக்குவரத்து விதி மீறல்கள் 33 தொடர்பில், உரிய அபராத சீட்டை வழங்குவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பொறுப்பாளரும் பணிப்பாளருமான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை சேவைக்கு அமர்த்துதல் ஆகிய 3 விதிமீறல்கள் புதிய திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு, அவை நீதிமன்றில் வழக்கு தொடருதல் அடிப்படையான குற்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய முறைமையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுசெல்லாமைக்கு 1,000 ரூபா அபராதமும் வீதி சமிக்ஞையை பின்பற்றாமைக்கு 1,000 ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்போருக்கு 1,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசி பாவனை உள்ளிட்ட குற்றங்களுக்கும் 1,000 ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

குறித்த அபராதத் தொகையை செலுத்த அபராதச் சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். குறித்த 14 நாட்களுக்குள் அபராதத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், குறித்த தொகையை இரட்டிப்பாக செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!