ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல்

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் மாவட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் 8ஆம் நாளான இன்றைய நிகழ்வு கிளிநொச்சியில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை மட்ட திறமை வாய்ந்தவருக்கான தங்கப்பதக்கம் இராமநாதன் தமிழ் கலவன் பாடசாலையின் பளுதூக்கல் வீராங்கனையான எஸ். துர்காவுக்கு கிடைத்துள்ளது.

அதேநேரம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் எஸ். அருணதி வெள்ளிப்பதக்கத்தையும் இராமநாதன் தமிழ் கலவன் பாடசாலையின் பளுதூக்கல் வீரரான எம். பாவலன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் கிளிநொச்சி மாவட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மஹாராஜா அமைப்பு மற்றும் அலியான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ரத்மலான ஸ்டெய்ன் கலையத்தில் நடைபெறவுள்ள ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் 20 விருதுகள் பரிசளிக்கப்படவுள்ளன.

ஆண்டின் அதிசிறந்த வீர, வீராங்கனை, ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீர, வீராங்கனை விருதுகளும் ரசிகர்களின் வாக்குகளுடன் தெரிவுசெய்யப்படும் ஜனரஞ்சக வீரர் விருதும் அதில் உள்ளடங்குகின்றன.

விருதுக்கான விண்ணப்பங்களை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா அமைப்பின் தலைமைக் காரியாலயம், விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு சங்கங்கள், அலியான்ஸ் கிளைகள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.

கிளிநொச்சியில் இன்று நடாத்தப்பட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின்போது, குறித்த பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கால்பந்தாட்டம், றக்பி, பேஸ்போல் ஆகிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Sharing is caring!