ஹிஸ்புல்லா மற்றும் தீவிரவாதி சஹ்ரான் உறவுகள் அம்பலமானது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹிற்கு தேர்தல் நேரத்தில் உதவிகள் புரிந்ததாக முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி சாட்சியம் வழங்கியுள்ளார் .

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளிக்கையில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் , சஹ்ரான் ஆயுதக்குழுவாக செயற்பட்டு கிழக்கில் மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும், இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் , அவருக்கு கட்டுப்பட்டு நடந்ததாகவும் அசாத் சாலி கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தம்முடன் உடன்படிக்கை மேற்கொள்ளும் கட்சிகளிற்கே உதவி செய்வதாக சஹ்ரான் தெரிவித்திருந்ததை அடுத்து, ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானுடனும் உடன்படிக்கை செய்ததாகவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஸ்புல்லாஹ் மட்டுமல்லாமல் மேலும் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சஹ்ரானுடன் உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமது தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு கொளுத்தக்கூடாது, பாடல் ஒலிபரப்பக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த உடன்படிக்கையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அப்துல் ராசிக் கைது செய்யப்படாமல் வெளியில் நடமாடுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்றும், அவர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை பின்பற்றுபவர் எனவும், ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் தாம் கூறியதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு பிரிவினருடன் கலந்துரையாடியதாகவும் முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி சாட்சியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!