11 பேரை கடத்தி கொலை சம்பவத்தில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

2008 – 2009 காலப்பகுதிக்குள் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 11 பேரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்புலான லியனகே , உபுல் சமிந்த மற்றும் சஞ்ஜீவ சேனநாயக்க ஆகிய உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் தொலைபேசியூடாக கப்பம் கோரியமை, கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியை நாரம்மல பகுதிக்கு அழைத்து பலவந்தமாக 5 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் உப்புல் சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர கடத்தப்பட்ட ஒருவரின் உறவினரை தம்பலகாமத்திற்கு அழைத்து ஆயுத முனையில் அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபா கொள்ளையடித்தமை மற்றும் கடத்தப்பட்ட 11 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கடத்திமை, சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை, கொலை சம்பவங்களுக்கு உதவி புரிந்தமை மற்றும் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சஞ்ஜீவ சேனநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!