15 சிறைச்சாலைகளில் சுற்றிவளைப்புகளில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன

நாட்டிலுள்ள 15 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது இவை கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

கைதிகளிடமிருந்து மாத்திரம் 115 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தவிர, கைதிகளிடமிருந்து 127 சிம் அட்டைகள், 57 கையடக்கத் தொலைபேசி பேட்டரிகள், 116 சிறியளவிலான போதைப் பொருளடங்கிய பக்கெட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டது.

இதேவேளை, அண்மையில் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் ஷாந்த எனும் நபரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் கைதி தப்பிச்சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 8 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதியை கேகாலை சிறைச்சாலையிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றும் சந்தர்ப்பத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

Sharing is caring!