2009 மே 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகின்றோம்

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது கடந்த 2009 மே 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகின்றோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால் மட்டுமே இந்நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும். இதுவே எமது பிரதான நோக்கம் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

நாம் உயிருடன் இருக்க வேண்டுமாக இருந்தால், நாம் பாதையில் சுதந்திரமாக நடமாட வேண்டுமாக இருந்தால், எமது பிள்ளை பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் புலிகள் அமைப்பு தலை தூக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8 ஆவது தேசிய நிகழ்ச்சி திட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேபோதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.

தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதனை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? ஒன்றுமில்லை. சில காணிகளை மக்களிடம் மீளவும் கொடுத்ததை தவிர இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பெண் தலைமைத்துவத்தின் கீழ் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?

வடகிழக்கில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளையும் கூட வழங்கவேண்டாம் என ஜனாதிபதி தடுக்கிறார். மண்ணின் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி போராடியதற்காக முன்னாள் போராளிகள் மனிதர்கள் இல்லையா? எதற்காக அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை கிடைக்கவிடாது ஜனாதிபதி தடுக்கிறார் என்றால் அவர் தெற்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே இதனைச் செய்கின்றார்.

அதேபோல் முன்னைய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மக்களுக்கு என்ன செய்தார்களோ அதனயே ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!