294 கிலோ ஹெரொயின்…..கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றல்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில், 2,945 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் தொகை இதுவாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று மாலை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.

இரு வேன்களில் தலா 5 பாரிய பொதிகளில் வைக்கப்பட்டிருந்த 272 சிறு பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 43 வயதான மொஹமட் பஷீர் மொஹமட் அச்மிர் மற்றும் 32 வயதான மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகியோரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகனத் தரிப்பிடத்திலேயே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை 2 வேன்களில் ஹெரோயின் கொண்டுவரப்பட்டிருந்தது. இரு வேன்களிலும் தலா 5 பயணப் பொதிகளில் கொண்டுவரப்பட்டபோதே, ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையும் முன்னெடுத்த இந்த சுற்றிவளைப்பில், 10 பயணப்பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 272 பொதிகள் கைப்பற்றப்பட்டன. விற்பனைக்காகவே இவை அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஹெரொயின் கொண்டுவரப்பட்ட வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. வேனில் வந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். பாணந்துறை பகுதியை சேர்ந்த 43 வயதான மொஹமட் பஷீர் மொஹமட் அச்மிர் மற்றும் 32 வயதான மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்

என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,

2019 ஆம் ஆண்டில் இதுவரையில், 520 கிலோ 762 கிராம் ஹெரோயினுடன், 6,651 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நாட்டிற்கு போதைப்பொருள் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றது என்பது தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் நாட்களில் வௌியிட முடியும்

எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!