700 ரூபா நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாத்தளை – தம்பளகலை தோட்டத்தில் சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, யட்டியாந்தோட்டை அய்லா தோட்டத்திலும் 1000 ரூபா சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது இணக்கம் காணப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை தம்மால் அங்கீகரிக்க முடியாது என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் – மல்லிகைப்பூ சந்தியில் இரண்டு தொழிலாளர்கள் இன்று காலை முதல் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். 1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி, புளியாவத்தை மற்றும் சலங்கந்த பகுதிகளைச் சேர்ந்த இருவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி 8 ஆவது நாளாக கொழும்பு கோட்டைரயில் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வு இடம்பெறுவதில்லை என்பதே தொழிலாளர்களின் ஆதங்கம்.

Sharing is caring!