71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீதி ஒழுங்குகளில் மாற்றம்

காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில், இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால், சில வீதிகள் மூடப்படவுள்ளதாக
போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்தியா வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடுன்ன சுற்றுவட்டத்தின் ஊடாக காலி வீதிக்குள் பிரவேசிப்பதற்கும், செரமிக் சந்தியூடாக பழைய பாராளுமன்றம் நோக்கி பயணிப்பதற்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யோர்க் வீதியால் இலங்கைவங்கி மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் சீனோர் சந்தியால் கோட்டை ரயில் நிலைய வீதியூடாக மத்திய தபால் பரிமாற்று நிலைய சந்தியூடாக செரமிக் சந்திக்குள் பிரவேசிப்பதற்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்க்கான் மாக்கார் வீதி, உத்தரனந்த மாவத்தை சந்தியூடாக காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் நண்பகல் 12 மணிவரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் குறித்த வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.

Sharing is caring!