அதிர்ஷ்டம் உழைப்பு இருந்தால் தான் வரும்

இறைவனின் அருளைப் பெறுவதற்கு கூட அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் நம்மில் உண்டு. ஆனால் உண்மையில் நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இறைவனது அருளும் கிட்டிவிடும் என்பதை உணர்த்தும் கதை.

நல்ல உழைப்பாளி ஒருவன் இருந்தான். விடாமுயற்சியோடு உழைத்தாலும் எதிர்மறை சக்திகளை நிரம்பக் கொண்டிருந்தான். கடினமாக உழைத்து வீட்டுக்கு வருவான். நமக்கெல்லாம் எங்கே அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று புலம்புவான். அதற்கேற்றாற்போல் கிடைக்கும் இலாபமும் குறையும். இப்படி இருந்த நிலையில் ஒருமுறை அந்த ஊருக்கு மகான் ஒருவர் வந்திருந்தார்.

இமயமலையில் 1000 வருடங்கள் தவம் செய்தவர் என்று  ஊர்மக்கள் அவரைப் பற்றி பெருமிதமாக பேசிக்கொண்டார்கள். அன்று இரவு அவன் மனைவி அந்த மகானைப் பற்றி கூறினாள். “என்ன கேட்டாலும் கொடுக்கிறாராம். உங்கள் பிரச்னையைப் பற்றி சொல்லிப்பாருங்களேன். அவரைப் பார்த்தாலே அதிர்ஷ்டம் கொட்டுமாம்” என்றாள்.

மறுநாள் இருவரும் அந்த மகானை பார்க்க வரிசையில் நின்றார்கள். இவ்வளவு கூட்டத்தில் அவரை பார்க்க நேரம் கிடைக்குமா என்று புலம்பினான். அவர்கள் முறையும் வந்தது. வழக்கம் போல் அவன் மகானிடம் புலம்பினான். கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எவ்வித பலனும் இல்லை என்றான். சட்டென்று அவன் பிரச்னையை யூகித்துக்கொண்ட மகான்  “மாலை வந்து என்னை பார்” என்று திருப்பி அனுப்பினார்.

அவன் வரும்போது அரத பழசான நாணயம் ஒன்றை தந்தார். பெயருக்குத்தான் நாணயமே தவிர அவற்றுக்கான அறிகுறி எதுவுமே இல்லாமல் உபயோகிக்கத் தகுந்ததாக அவை இருந்தது. அதை வாங்கி சுற்றுமுற்றும் திருப்பி பார்த்தான். மகான் அதைக் கவனித்து “இது மெளரிய கால நாணயம். சந்திர குப்தர் வைத்திருந்தது. இதை கையில் வைத்திருந்ததால் தான் அவருடைய நாட்டை திரும்ப பெற முடிந்தது.

நான் திரும்பி வரும் போது நீ பெரிய செல்வந்தனாக மாறியிருப்பாய்” என்றார். இவனும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினான். மகானின் சீடர்கள் இதைக் கவனித்து “இதை நேற்று இங்குதானே கண்டெடுத்தோம் ஆனால் ஏன் அப்படி கூறினீர்கள்?” என்று கேட்டனர். “அவனுக்கு தேவை நம்பிக்கை மட்டுமே. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

மகானிடம் நாணயம் வாங்கியவனுக்கு தலை கால் புரியவில்லை. எந்நேரமும் நாணயத்தை விடாமல் பற்றிக்கொண்டு அலைந்தான். தூங்கும் போது கூட சட்டைப்பாக்கெட்டில் வைத்து உறங்கினான். இதைக் கவனித்த மனைவி அந்த நாணயத்தை  வைத்துக்கொள்ள கோட் ஒன்றை தயாரித்து கொடுத்தாள். அந்தக் கோட் அணிந்துதான் வெளியில் சென்று வருவான். இப்படியே மாதங்கள் கழிந்தது. என்ன ஆச்சர்யம். மகான் சொன்னது போல் செல்வக் குவியல் அவனுக்கு சேர்ந்தது.

ஒருநாள் அந்த நாணயத்தைக் காண வேண்டும் என்று கோட்டில் தேடினான். ஆனால் பதிலாக வேறு நாணயம் இருந்தது. அவன் மனைவியிடம் “நாணயம் காணவில்லையே” என்றான். அவள் பயந்தபடி “ஒரு நாள் கோட் துவைக்கும் போது கவனிக்காமல் உதறினேன். எங்கு விழுந்தது என்று தெரிய வில்லை” என்றாள். “எப்போது” என்றான். “நீங்கள் கோட்டில் வைத்த மறுநாளே” என்றாள்.  அவன் ஒன்றும் சொல்லவில்லை. வழக்கம் போல உழைத்தான்.

செல்வமும் குறையாமல் பெருகியது. மீண்டும் அந்த ஊருக்கு வந்த மகானை சந்தித்து நாணயம் காணாமல் போன விஷயத்தைச் சொன்னான். ”பரவாயில்லை மகனே. அது உண்மையில் உங்கள் ஊரில் கண்டெடுத்த சாதாரண நாணயம் தான். உனக்கு நம்பிக்கை ஏற்படவே சொன்னேன் ஆனால் உண்மையிலேயே நீ உழைப்பில் சிறந்தவன் இல்லாத அதிர்ஷ்டம் ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொண்டாய்” என்றார். உண்மைதான் ஐயா என்றபடி  விடைபெற்றான். அருகில் இருந்த சீடர்களும் புன்னகைத்தார்கள்.

அதிர்ஷ்டம் என்பது கூட உழைப்பு இருந்தால் தான் வரும் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லோருக்கும் வாழ்வில் வெற்றி நிச்சயம்தான்.

Sharing is caring!