அன்பிற்கோர் அவதாரம் இயேசுபாலன்

இறைவாக்கினரால் முன் அறிவிக்கப்பட்ட இறைமகன் இயேசு கவனிப்பார் அற்ற நிலையில் மனித வரலாற்றுக்குள் நுழைந்த நாளை வருடந்தோறும் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆனால் நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழாவின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுள் தம் மக்களைப் பாவம் என்னும் இருளில் இருந்தும் அடிமை வாழ்விலிருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார். ஆனால் நாம் வாழ்கின்ற இந்தக் காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரோளியை அளிக்கின்றார். ஆனால் நாமோ அவரது அன்பை உதறித் தள்ளி விட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றோம். எளிய முறையில் குழந்தை வடிவில் பிறந்த கடவுள் இறந்தோரின் கடவுள் அன்று. மாறாக வாழ்கின்ற கடவுள்.

அவரிடம் இருக்கின்ற வாழ்வுதான் இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக சின்னஞ்சிறு குடிலில் பிறந்துள்ளது. கடவுள் மனிதராகப் பிறந்தது மானிட குலத்திற்கே மாபெரும் கொடையாக அமைந்துள்ளது. பலமுறை பல வகைகளில் இந்த மீட்பு என்னும் ஒளியை அளிக்க முயன்ற கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அளிக்கின்றார்.

இவ்வாறு கடவுள் தன் மகனை உலகிற்கு அனுப்ப ஏதுவாயிருந்த காரணம் என்ன? மனிதனை இவ்வுலகில் படைத்த கடவுள் தொடக்கத்திலிருந்தே மனிதன் வாழ வேண்டிய வழிமுறையை மோயீசன் வழியாக வெளிப்படுத்தினார். அவர் கொடுத்த கட்டளைகளின் சாராம்சம் அன்பு ஒன்றுதான்.மனிதர் அன்பை உணராத நிலையில் பாவம் உலகத்தில் தோன்றலாயிற்று. இந்நிலையில் கடவுள் உலகின் மேல் மீண்டும் அன்பு கொண்டார். அதன் வெளிப்பாடுதான் மனித வடிவில் உதித்த இயேசு. அன்பு என்னும் இறைவனின் நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதே தனது பணி, அதற்காகவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்று கூறிய இயேசு அவ்வாறே வாழ்ந்ததை நாம் நற்செய்தி ஏடுகளில் காண்கின்றோம்.

அன்புக்காக வாழ்ந்த இயேசு அந்த அன்புதான் உண்மை என்பதையும் நிலைநாட்டுகின்றார். இயேசு மரண தண்டனைக் கைதியாக பிலாத்துவின் முன்னிலையில் நின்ற போது இயேசுவுக்கும் பிலாத்துவிற்கும் இடையில் நடந்த உரையாடலின் போது இயேசு இவ்வாறு கூறுவதை நாம் யோவான் நற்செய்தியில் காண்கின்றோம்.“உண்மையை எடுத்துரைப்பதே என் பணி, இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன்” என்கிறார் இயேசு.

அதற்குப் பிலாத்து “உண்மையா அது என்ன? என்கின்றான். ஆம் உண்மைதான் அந்த அன்பு. அன்புக்கு மறுபெயர் அன்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டால்தான் உலகம் உய்வடையும். இன்றைய உலகில் நாம் காணும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் இந்த அன்பு என்னும் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான். அன்பிற்கோர் அவதாரமாய் அன்பின் முழுவடிவமாய் பிறந்த அண்ணல் இயேசுவின் பிறப்பு விழாவை கொண்டாடும் நாம் “உன்னை நீ நேசிப்பது போல் உனக்கு அடுத்திருப்பவரையும் நேசிப்பாயாக” என்ற இயேசுவின் பொன்மொழியை பெற்று அவர் தந்த உண்மையில் அன்பில் நிலைத்து வாழ்வோமாக.

-அம்புறோஸ் பீற்றர்

Sharing is caring!