அமாவாசைகளின் தலைவன் மஹாளய அமாவாசை!

மாதத்தில் ஒருநாள், சூரியனும், சந்திரனம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்கின்றனர். அந்த நாளே அமாவாசை எனப்படுகிறது. அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு, அதிக தாகமும், பசியும் ஏற்படும். இதனால்தான், அமாவாசையன்று, பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோருக்கும், முன்னோருக்கும், எள் கலந்த தண்ணீரால், தர்ப்பணம் செய்ய வேண்டும் என, நம் முன்னோர் கூறியுள்ளனர்.

மாதம் தோறும் வரும் அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். முடியாதவர்கள், ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசையன்று, கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையன்று, தந்தை இல்லாத அனைவரும், தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், அமாவாசைகளிலேயே, முதன்மையான அமாவாசை, மஹாளய அமாவாசைதான். மஹாளய அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்ப்பணம், பித்ருக்களை கண்டிப்பாக போய் சேரும். மஹாளய பட்சத்தின், 15 நாட்களும், பூமிக்கு வந்த பித்ருக்கள், அமாவாசை முடிந்தவுடன், பித்ருலோகத்துக்கு திரும்பிவிடுவர்.

அதனால், மஹாளய அமாவாசையன்று, தர்ப்பணம் செய்வதுடன், அன்னதானமும் வழங்கினால், பித்ருக்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, நமக்கு அருளாசி வழங்கி, பித்ருலோகம் திரும்புவர்.

ஏழைகளுக்கு அன்னதானம், ஆடை தானம் உட்பட எந்த தானமும் இன்று வழங்குவது சிறப்பு. இது முன்னோரின் அருளாசியை நமக்கு பெற்று தரும். இதனால், வீட்டில் நிம்மதி நீடிக்கும், செல்வம் செழிக்கும், எந்த குறையும் இல்லாமல், சுபிட்சமாக வாழலாம்.

மஹாளய அமாவாசை தினமான, இன்று, தர்ப்பணம் செய்து, நம்மால் முடிந்த தானங்களை செய்து, முன்னோர்களின் அருளாசியை பெறுவோம். சிறப்பாக வாழ்வோம்.

Sharing is caring!