அறுபதாம் கலியாணம் தேவைதானா?

இருமனம் இணையும் திருமண நிகழ்வுகளும், பாரம்பரியமாக செய்யப்படும் சடங்குகளும் குறைக்கப்பட்டு மிதமிஞ்சிய நாகரிகம் என்னும் பெயரில் சடங்குகளை சலிக்க துடைத்து விட்டோம். இதில் அறுபதாவது கல்யாணம் மட்டும் உரிய சடங்குடன் நடத்தப்படுகிறதா என்று கேட்க தூண்டினாலும் அறுபதாம் கல்யாணம் பெரும்பாலும் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை என்பதே உண்மை. ஆனால் மனிதன் தன் வாழ்வை பூரணத்துவமாக வாழ்ந்து முடித்ததன் அடையாளத்துக்கு கண்டிப்பாக உக்ரரத சாந்தி நடத்த வேண்டும் என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது அறுபதாம் கல்யாணம் என்னும் பெயரில் நடத்தப்படும் ,ஷஷ்டியப்த பூர்த்தி அல்லது மணிவிழா என்னும் விழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என்று நமது இந்து மதம் அறிவுறுத்துகிறது.

ஒரு குழந்தை பிறந்த 12 வயது வரை அக்குழந்தையை பாலாவஸ்தா என்று அழைத்தார்கள். அந்த வயதில் குழந்தைக்கு தேவை சாப்பாடு, விளையாட்டு, தூக்கம் மட்டுமே. 12 வயதிலிருந்து 24 வயது வரை பிரம்ம உபதேசம் எனப்படும் பருவம். அதாவது கல்வி கற்கும் காலம் ஆகும். குருகுலத்தில் குருவிடம் தங்கி கல்வி, ஒழுக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றை கற்றறிவான். குருவிடம் இருந்து கல்வி பயின்ற சீடன் தேவையெனில் துறவு வாழ்க்கையை நேரிடையாக மேற்கொள்ளலாம். அல்லது திருமணம் புரிந்து அடுத்த 24 வருடங்கள் இல்லற வாழ்க்கையை வாழலாம். இத்தகைய காலத்தில் இவர்களது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தம்பதியர் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வார்கள். 12 வருடங்கள் ஆன்மிக வழியில் தங்களை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள். 12 வருடங்கள் பிரிந்து மீண்டும் இணைந்து வாழ்வதால் இவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்து வந்தது.

இந்து மதமானது, மனிதனாக பிறந்தவர்கள் ஆதி பெளதீகம், ஆதிதை வீகம், ஆதிஆத்மிகம் என்கிற இயற்கை, தெய்வக்குற்றம், அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்த பாவகாரிய பலன்களால் ஏற்படும் தீயபலன்களிலிருந்து தங்களைக் காத்து, இறைவனின் அருளைப் பெறுவதற்காக வேண்டி, தங்களது 59,60,61 மற்றும் 70 வயது துவக்க காலத்தில்,78 ஆம் ஆண்டு துவக்கத்தில்,80 ஆம் ஆண்டு நிறைவு போன்ற காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது 59 ஆம் ஆண்டு  உக்ரரதனின் ஆளுமைக்கு அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் உக்ரரத சாந்தி அவர்களது பிள்ளைகளால் சிறப்பாக நடத்தப்படவேண்டும். 78 ஆம் ஆண்டு துவக்கத்தில் விஜயன் என்னும் ருத்ரனின் சாந்திக்காக அவரை  அமைதிப்படுத்த விஜயரதசாந்தி சடங்கு செய்ய வேண்டும். அதேபோல் 80 ஆவது ஆண்டு பூர்த்தியடைந்த எட்டாம் மாதத்தில் ஜென்ம நட்சத்திரத்தன்று சகஸ்ர  சந்திரதர்சன சாந்தி செய்ய வேண்டும். 100 வயது முடிந்து 101 வது வயது தொடங்கும் போது செய்யப்படும் சாந்தி, சதாபிஷேக கனகாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் மனிதன் செய்ய வேண்டிய சடங்குகளில் 41 சடங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கூறப்பட்டுள்ளது. இந்தச் சடங்குகளில் பெரும்பாலானவை  குழந்தைப்பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் அவர்களது பெற்றோர்களால் செய்யப்பட்டுவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷஷ்டியப்த பூர்த்தி விழாவில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ம்ருத்யுஞ்ஜய கலசம் வரிசையாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம்,கணபதி,நவக்கிரகம், அதிதேவதை, ப்ரதியதி தேவதை என 13 வித கலச பூஜை செய்வது சிறப்புக்குரியது. சிவ தீட்சை எடுத்துக்கொண்டவர்கள் வழிபாட்டுக்கு பிறகு தைலதானம், வஸ்திரதானம், நவதானிய தானம், கோதானம், புஷ்ப தானம், தீப தானம், ருத்ராட்ச தானம், ஆஜ்யதானம், உதகபாத்ரதானம் ஆகிய 9 தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை என்னும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டி ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து, இரண்டாம் அறுபது ஆண்டுகளுக்கான சுற்றுகளில் அடியெடுத்து வைக்கும் போது மனிதன் முதலில் வாழ்ந்த லெளகீக வாழ்க்கையை துறந்து தர்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். இது வரை வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயங்களினால் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளிலிருந்து வெளியேறி எஞ்சியிருக்கும் காலத்தில் தன் ஆத்மா நல்ல நிலைமையில் வாழ உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை செய்த பாவங்களுக்கு வருந்தி பரிகாரம் என்ற பெயரில் மனதை தூய்மையாக்கி கொள்ள வேண்டும். இனி வாழும் காலங்களில் தம் உடன் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு தன்னுடன் வாழும் தன் துணைவியுடன் தரும காரியங்களில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்வை துறக்க வேண்டும். மணிவிழா கொண்டாட விரும்பும் தம்பதியர் திருக்கடையூயில் உள்ள சிவத்தலத்திற்கு சென்று மணிவிழா கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தந்தையின் அறுபதாம் கல்யாணத்தை முன்நின்று நடத்தி அவர்களது இறுதிகாலத்தை மகிழ்ச்சியாக செய்யும்படி வைத்திருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு. ஆடம்பரமாக இல்லையென்றாலும் சிறிய அளவிலேனும் அவசியமாக கொண்டாடி தம்பதியரிடம், தம்பதியர் சகிதமாய் ஆசிர்வாதம் பெறுவது நல்லது.

Sharing is caring!