அளவில்லா சத்துக்களைக் கொண்ட முருங்கைக் காம்பு ரசம்…

புரதச்சத்து குறைபாடுகளையும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சரியாக வைக்கவும்,  ஹீமோ குளோபினை பன்மடங்கு அதிகரிக்கவும் என அனைத்து வேலைகளையும் சத்தமின்றி செய்கிறது எளிய முறையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் முருங்கை.

முருங்கை மரத்தில் இலை, காம்பு, பூ, காய் என எல்லாமே  மருத்துவக் குணங்கள் உடையவை. அசைவ உணவுகளில் கிடைக்கும் அமினோ அமிலங்களை எளிதில் கொடுத்துவிடுகிறது முருங்கைக் கீரை. முருங்கையில் அமினோ அமிலங்கள், புரதங்கள்,  இரும்புச்சத்து, நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம் போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.

முருங்கைக்கீரையைப் பொறியலாக்குவோம். பூவை அரை வேக்காட்டில் வேக வைப்போம். காயை பொறியலாகவோ குழம்பில் போட்டோ சாப்பிடுவோம். ஆனால் முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யும் போது கிடைக்கும் காம்பிலும் அபரிமிதமான சத்துக்கள் உண்டு. இந்தக் காம்பை வீணாக்காமல் சூப் செய்து அல்லது ரசம் வைத்து சாப்பிடலாம்.

கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் ரசத்தை மேலும் விரும்பி குடிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சுவையான முருங்கைக் காம்பு சூப், ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

முருங்கைக் காம்பை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். முற்றின காம்புகள் வேண்டாம். நறுக்கிய துண்டுகளை அலசி சட்டியில்  சொட்டு நல்லெண்ணெய்விட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் மத்தால்  நன்றாக மசித்து நீரை வடிகட்டவும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து கறிவேப்பிலைத் தூவி  வடிகட்டியை நீரை சேர்த்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கினால் சூப்  தயார்… இந்த வடிகட்டிய நீரை  ரசத்தில் சேர்த்தால் முருங்கைக் காம்பு ரசம் தயார்…

இனி முருங்கைக்கீரையைப் பொறித்தால் காம்பை ரசமாக்குங்கள். காம்பின் சத்துக்களும் தாரளமாய் உடலுக்கு சேரட்டும்….

Sharing is caring!