அழைத்தவுடன் ஓடி வந்து கேட்ட வரம் அருளும் சீரடி சாயிபாபாவின் அற்புதங்கள்… !!

பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. என்ன செய்வேன் பாபா என்று மனதுக்குள் உருகினாலே பாபாவுக்கு தாங்காது. ஏதோ ஒரு வகையில் கேட்டது கேட்டபடி கிடைக்கும். ஆனால் பாபாவைப் பொறுத்தவரை அது நேர்மையான கோரிக்கையாக மட்டும் இருக்கவேண்டும். இதை உணரும் பக்தர்கள் பாபாவின் அருகாமையை ஒவ்வொரு நொடியிலும் உணரக்கூடும். சரி பாபாவிடம் என்ன கேட்கலாம் ?

எதுவும் கேட்கலாம்….எல்லாம் கேட்கலாம்.. கேட்டது கேட்டபடி கிடைக்கும். என்னிடம் எதுவுமில்லை பாபா.. வறுமையில் வாடுகிறேன்… எனக்கு பசிக்கிறது பாபா என்றால் பாபாவின் அருளால் பாபாவின் அருகாமையில் ஏதோ ஒருவகையில் நீங்கள் திருப்தியாக பசியாறுவீர்கள். அதைத் தொடர்ந்து நீங்களும் உங்களை நம்பியிருப்பவர்களும் தொடர்ந்து பசியாற உங்களுக்குப் பாதை அளிப்பதும் பாபாவின் அற்புதங்களில் ஒன்று.

உனக்கு என்ன தேவை என்பதை நான் அறிவேன். நான் இருக்கும் போது நீ கவலைப்படலாமா? உனக்கு ஒன்று என்றால் உன்னை விட அதிகம் துடிப்பது நானாகத்தான் இருக்கும். உன் பாரத்தை நான் சுமக்கும் போது அதை இறக்கும் வைக்கும் பொறுப்பு எனதாகத்தான் இருக்கும் என்பதை உணராமல் ஏன் புலம்புகிறாய் என்பதே பாபாவின் கேள்வி.. எனக்கு உடல்நலம் சுகமில்லை பாபா… தீராத வியாதி என்னைப் பீடித்து ஆட்டுவிக்கிறது என்று பாபாவிடம் சென்ற பக்தை, என்ன ஆனாள் என்பதை பார்ப்போம். உடல்நிலை சுகமில்லை என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் அது என்ன பாபாவை அழைப்பது என்று கேட்காதீர்கள். பாபாவிடம் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு அதற்கான சிகிச்சையைப் பார்த்தால் போதும். அப்படித்தான் அந்த பக்தைக்கும் நடந்தது.

பாபாவைப் பற்றி அறியாத விஷ்ணு பக்தை அவள். காணும் கடவுளின் உருவமெல்லாம் அவளுக்கு விஷ்ணுவாகத்தான் இருக்கும். ஒரு சமயம் கோயிலுக்கு செல்லும் போது பக்தி பற்றிய பேச்சு அவள் காதில் விழுந்தது. இரு பெண்மணிகள் ஷீரடியில் ஒரு பக்கிரி பகவான் இருக்கிறார். மிகவும் சக்தி படைத்தவராம் அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டனர். இதைக் கேட்ட பக்தைக்கு கோபம் தான் வந்தது. அது என்ன விஷ்ணுவை தரிசிக்க வந்து விதண்டாவாதமாய் வேறு ஒருவரை அதுவும் பக்கிரி என்பவரை போய் சக்தி படைத்தவர் என்று பேசிக்கொள்வது என்று எண்ணினாள். ஒருமுறை தலைவலி வந்து சிரமப்பட்டாள். குனிந்தால் தலை கீழே விழுந்து விடுமோ என்னும் அளவுக்கு தலைபாரம் அவளை வாட்டியது . என்ன வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. மருத்துவமனையிலும் ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்தனர். ஆனால் ஆச்சர்யம் இன்ன நோய்தான் என்று அவர்களாலும் கண்டறிய முடியவில்லை. எல்லா விதமான வைத்திய முறைகளிலும் அவளுக்கு தோல்வி தான் கிட்டியது. இனி நமக்கு இப்பிறவி அவ்வளவுதான். இனி விஷ்ணுவை சரணடைவோம் என்று கோயிலுக்கு சென்றாள்.

கோயிலில் அதே இருபெண்மணிகள் இவளைக் கண்டதும் நலம் விசாரித்தார்கள். மெதுவாக தயங்கியபடி உங்கள் நிலைமை எங்களுக்குப் புரிகிறது. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தை என்பதும் உண்மையானது தான். ஆனால் எங்களுக்காக ஒருமுறை ஷீரடி வருகிறீர்களா? அவரை வழிபடவோ பகவானாகவோ ஏற்க வேண்டாம். உங்கள் சிகிச்சைக்காக என்று நினைத்து கொள்ளுங்களேன் என்று அழைத்தார்கள். அந்தப் பக்தைக்கு யாருடைய மனதையும் நோகடிக்க விருப்பமில்லை. சரி விஷ்ணுபகவானின் விருப்பம் அது என்றால் நான் என்ன செய்ய முடியும் ,வருகிறேன் என்று அவர்களுடன் ஷீரடி கிளம்பினாள். ஷீரடி மண்ணில் கால் பதித்ததும் அவள் மனதுக்குள் ஸ்ரீமந் நாராயணனின் முகம் வந்து போனது. அவரை நினைத்தப்படி பாபா வசிக்கும் இடத்துக்கு வந்தாள். பக்கிரியை பக்தர்கள் சுற்றியிருக்க..மெதுவாக பாபாவைக் கண்டவள் திகைத்தாள். பாபாவின் முகமோ ஸ்ரீ மந் நாராயணனாக அவளுக்கு காட்சி தந்தது. நாராயணா என்றபடி தன்னிலை மறந்து பாபாவின் பாதங்களைப் பற்றினாள். கவலைப்படாதே.. நீ கவலைப்பட்டு அழுதால் எனக்கல்லவா தலை கீழே விழுவது போன்ற வலி ஏற்படும் என்றார். புரிந்தும் புரியாமலும் இருந்த பக்தைக்கு வார்த்தைகள் வரவில்லை. மாறாக கண்ணீர் பெருக்கெடுத்தது. புரிந்துவிட்டது நாராயணா.. இதுவரை உன்னை காணாமல் இருந்து அரிய பேறை இழந்துவிட்டேனே. இனி நான் அழமாட்டேன். உன் பாதம் போதும்.. நான் பிறவியை கடந்துவிடுவேன் என்றாள். ஆம் நாராயணனும் நான் தான். நீ என்னவாக என்னை வழிபட விரும்புகிறாயோ அவ்வாறே நான் உனக்கு தரிசனம் தருவேன். தர வேண்டியதையும் தருவேன் என்று சொல்லாமல் சொல்லி புன்னகை செய்யும் பாபாவிடம் நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள்?

Sharing is caring!