அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள் என்ன நடக்கும் தெரியுமா ??

தற்போதைய அவசரமான காலக்கட்டத்தில் பலருக்கு அன்றாட பழக்கங்களே ஒரு பெரிய வேலையாக உள்ளது. குறிப்பாக சாப்பிடுவதையே பலர் ஒரு வேலையாக கருதுகின்றனர். இதனால் அன்றாடம் சாப்பிடுவதற்கு என்று வெறும் 5-10 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். ஒருவர் உணவை இவ்வளவு குறைவான நேரத்தில் வேகமாக உட்கொண்டால், அதனால் உடல் ஆரோக்கியம் பலவாறு பாதிக்கப்படும் என்பது தெரியுமா?

ஒருவர் உணவை உண்ணும் போது வேகமாக என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அறியாமல் உண்பது என்பது மிகவும் மோசமான பழக்கம். உங்களுக்கும் இந்த பழக்கம் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள். உணவு உண்பதை ஒரு வேலையாக கருதாமல், நம் உடலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் ஒரு முக்கிய செயலாக நினையுங்கள்.

இப்போது ஒருவர் வேகமாக உணவை விழுங்குவதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்துக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் வேகமாக உணவை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும்
ஒருவர் வேகமாக உணவை சாப்பிடும் போது, எவ்வளவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்காமல், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடும். இப்படி அதிகமாக உணவை உட்கொண்டால், அது தேவையில்லாமல் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக வேகமாக உணவை உண்ணும் போது, மூளைக்கு நாம் போதுமான அளவு உணவை உட்கொண்டோமா என்பதை உணர்வதற்கு போதுமான நேரத்தை வழங்காமல் இருப்பதால், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ள நேரிடுகிறது.

உடல் பருமன்
உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். குறிப்பாக வேகமாக உணவை உண்பவர்கள் தான் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் வேகமாக உணவை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு, மெதுவாக உணவை மென்று விழுங்கினால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மோசமான செரிமானம்
வேகமாக உணவை உண்பவர்கள் பொதுவாக அதிகளவு உணவை ஒரே நேரத்தில் வாயில் வைத்து, சரியாக மெல்லாமல் அப்படியே விழுங்குவார்கள். சில சமயங்களில் உண்ணும் உணவை நீர் அல்லது இதர கார்போனேட்டட் பானங்களுடன் அப்படியே விழுங்குவார்கள். இம்மாதிரியான பழக்கத்தை உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அஜீரண கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசத்தால் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

இன்சுலின் எதிர்ப்பு
ஒருவர் வேகமாக உணவை விழுங்கினால், இரத்த சர்க்கரை அளவு திடீரென்று சட்டென்று அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். இன்சுலின் எதிர்ப்பு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.

மெதுவாக சாப்பிடுவது எப்படி?
வழி #1

உணவை எப்போதும் தவிர்க்கக்கூடாது. ஏனெனில் ஒருவேளை உணவு உண்பதைத் தவிர்த்தால், பசியுணர்வு அதிகரித்து, மறுவேளை சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் உணவை உண்ண வழிவகுக்கும்.

வழி #2
டிவி/மொபைல்/கம்ப்யூட்டர் முன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றின் முன் அமர்ந்து திரையைப் பார்த்தவாறு உட்கொண்டால், எவ்வளவு உணவை உட்கொள்கிறீர்கள் என்பதும் தெரியாது மற்றும் மிகவும் வேகமாகவும் உணவை உண்பீர்கள். எனவே எப்போதும் உணவை உண்ணும் போது, கவனம் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வழி #3
உணவை உண்ணும் போது வேகமாகவும் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு உணவை மென்று அரைக்காமலும் விழுங்கக்கூடாது. ஒருவர் உணவை நன்கு மென்று விழுங்குவதால், செரிமானம் மேம்படும். எனவே சாப்பிடும் போது உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.

Sharing is caring!