ஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்….

புத்தரிடம் ஞானம் பெறுவதற்காக ஒருவன் வந்தான். தியானத்திலிருந்த புத்தர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான். புத்தர் கண்விழித்து இவனைக் கண்டதும் “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “நான் இந்த உலகத்தில் பல வழிகளில் துன்பங்களையும் சித்ரவதையையும் அனுபவித்துவிட்டேன். நான் இந்த உலக வாழ்விலிருந்து விடுபட விரும்புகிறேன். நான் துறவறம் மேற்கொள்ள விரும்புகிறேன். தாங்கள் தான் அதற்கு வழிகாட்ட வேண்டும்” என்றான்.

புத்தர் சிறிது நேரம் கழித்து அவனிடம் “மனித மனங்கள் நிலையானதல்ல. எப்போதுமே ஒரு வித அலைபாய்தலோடு இருக்கும். அதற்கு நீயும் விதி விலக்கல்ல. உனக்குக் குடும்பம் உண்டா?” என்றார். “மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்” என்றான். “ஆனால் உன் மனதிலிருக்கும் பந்த பாசத்தை விட்டு ஒழித்தாலன்றி நீ துறவறம் மேற்கொள்ள முடியாது” என்றார் புத்தர்.

“ஆமாம் சுவாமி நான் பந்த பாசத்தை விட்டு வந்திருக்கிறேன். இனி என் மனம் அலைபாயாது என்றே நம்புகிறேன். அதனால் எனக்கு நீங்கள் தான் தகுந்த வழிகாட்ட வேண்டும்” என்றான். உடனே புத்தர் “சரி அப்படியானால் நீ என்னுடன் இந்த போதி வனத்திலேயே தங்கலாம்” என்றார். சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் நீராடுவதற்காக புத்தர் குளக்கரைக்குச் செல்லும்போது இவன் பக்கத்தில் நாய்க்குட்டி ஒன்று நின்றிருந்தது. புத்தரைக் கண்டதும் அவன் மகிழ்ச்சி பொங்க “இது நான் வளர்த்த நாய்க்குட்டி சுவாமி. இது எப்போதும் என்னை விட்டு நீங்காது என்பதால் என்னை தேடி இங்கு வந்துவிட்டது. அதனால் தாங்கள் அனுமதித்தால் இதை என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றான். புத்தர் புன்னைகத்தப்படி சென்றுவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து குளத்தருகில் நாய்க்குட்டியுடன் 3 குழந்தைகளும் நின்றிருந்தார்கள். நீராட வந்த புத்தர் “யார் இவர்கள்?” என்று கேட்டார். “இவர்கள் மூவரும் என்னுடைய குழந்தைகள். நாய்க்குட்டியைப் பிரிந்து இவர்களால் இருக்க முடியவில்லை என்பதால் இவர்கள் இங்கு வந்துவிட்டர்கள். தாங்கள் அனுமதித்தால் இவர்களை என்னுடன் தங்க வைத்துக்கொள்கிறேன்” என்றான். இப்போதும் புத்தர் எதுவும் பேசாமல் புன்னகையுடன் சென்றுவிட்டார்.

சிலநாட்கள் கழித்து நாய்க்குட்டி, குழந்தைகளுடன் ஒரு பெண்மணி அங்கு இருந்தாள். ”யார் இந்த பெண்மணி?” என்றார் நீராட வந்த புத்தர். உடனே அவன் ”என்னுடைய மனைவி சுவாமி. இவளால் எங்களை விட்டு இருக்க முடியவில்லை என்கிறாள். தாங்கள் அனுமதித்தால் இவளையும் என் உடன் வைத்துக் கொள்கிறேன்” என்றான். புத்தர் அவனை ஆற்றுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.

ஒருபாத்திரத்தில் கற்களை நிரப்ப சொன்னார். மறுபாத்திரத்தைக் காலியாக வைக்க சொன்னார். இரண்டையும் ஆற்றில் விட்டார். கற்கள் நிறைந்த பாத்திரம் நீரில் மூழ்கியது. காலிபாத்திரம் மிதந்துசென்றது. இதைச் சுட்டிகாட்டிய புத்தர் மனதில் பாசம், குடும்பம், பற்று, ஆசை இருக்கும் வரை பாரத்தை சுமந்து இருக்கும். இவற்றால் இதிலிருந்து விடுபட முடியாமல் துன்பத்தை அடைந்து மூழ்கிவிடும். ஆனால் வாழ்வின் மீதே பற்றில்லாதவர்களால் மட்டுமே மனத்தைப் பாரமாக்காமல் துறவறம் பூண்டு காலிபாத்திரம் நீரில் மிதப்பது போல ஞானத்தைப் பெற முடியும் என்றார். புரிந்துகொண்ட அவன் குடும்பத்தோடு வாழ்கிறேன் என்று ஆசிர்வாதம் பெற்று சென்றான்.

Sharing is caring!