ஆசை இல்லாத மகிழ்ச்சி தான் நிலைக்கும்…

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற முடியும். இதுதான் உலக நியதி. இதை உணர்ந்துவிட்டால் மனிதர்கள் நிம்மதியைத் தேடி அலைய வேண்டியதில்லை.

வெள்ளியங்கிரி என்னும் நாடு இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பிரதேசத்தை ஒட்டி அமைந்திருந்தது. இயற்கை வளங்கள் நிரம்பி வழிந்த இந்த நாட்டை சொரூபராஜா என்னும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். மக்களும் செல்வ வளத்தாலும், மகிழ்ச்சியாலும் எவ்வித துன்பமின்றி சுகபோகமாக வாழ்ந்தார்கள். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும் அரசன் மட்டும் ஏதோ பறிகொடுத்தாற் போல் இருந்தான். மனதில் நிம்மதியின்றி தவித்தான். ஏன் நிம்மதியில்லை என்று அரண்மனைவாசிகள் அனைவரிடமும் கேட்டான். யாராலும் அரசனின் கேள்விக்கு திருப்தியான விடை அளிக்க முடியவில்லை.

நாளடைவில் அரசன் கேள்விக்கான பதிலை தேடித் தேடி சோர்ந்து போனான். ஒரு நாள் உப்பரிகையில் நின்றிருந்தான். பிச்சைகாரன் ஒருவன் ஆடிகொண்டும் பாடிக்கொண்டும் சத்தமாக சிரித்தப்படி அரண்மனையைக் கடந்து சென்றான். சில நிமிடங்கள் அரசன் அந்த பிச்சைக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றுமே இல்லாமல் இவனால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது என்று ஒரே ஆச்சரியமாகிவிட்டது. காவலாளிகளை அழைத்து அதோ அந்த பிச்சைக்காரனை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

காவலாளிகள் அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்து எங்கள் மன்னர் உன்னை அரண்மனைக்கு வர சொல்கிறார் வா எங்களோடு என்றார்கள். ”என்னால் வர முடியாது. தேவை என்றால் உங்கள் அரசன் வந்து என்னை பார்க்கட்டும்” என்று  கூறியபடி அங்கேயே அமர்ந்துகொண்டான். காவலாளிகள் நடந்ததை அரசனிடம் தெரிவித்தார்கள். நான் அரசன் என்னை பார்க்க சாதாரண பிச்சைக்காரன் மறுத்து விட்டானே.. காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனை பார்க்க சென்றார்.

”அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் மிஞ்சி இருக்கும் போது, எப்படி உன்னால் ஆடி பாடி சிரித்தப்படி இருக்க முடிகிறது.  என்னிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. ஆனால் உன்னைப்போல் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நிம்மதியாக இருக்க முடியவில்லை அதனால் தான் உன்னை கேட்கலாம் என்று அழைத்தேன் நீ வர மறுத்துவிட்டாய்” என்றார். ”ஓ நீங்கள் இந்த நாட்டு அரசனா? அந்த மாளிகை உங்களுடையதா?” என்றான். ”ஆமாம்” என்றார் மன்னன்.

”நீங்கள் நிம்மதியாக கவலையின்றி இருக்க வேண்டுமானால் இந்த அரண்மனையை விட்டு என்னோடு வாருங்கள்” என்றான். அதெப்படி என்னால் வரமுடியும். மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பில் எனக்கு அக்கறை இருக்கிறது” என்றான். பிச்சைக்காரன் முன்பை விட சத்தமாக சிரித்தான். ”ஒன்றை பெற மற்றொன்றை இழந்துதான் ஆகவேண்டும். சுகபோகமான வாழ்க்கை வேண்டுமென்றால் அதைக் காப்பாற்றிகொள்ள செய்ய வேண்டிய பிரயத்தனமும் செய்துதான் ஆகவேண்டும். இரண்டையும் ஒன்றாக பெற வேண்டுமென்றால் எப்படி முடியும். என்னை பார்த்தீர்களா.

என்னிடம் எதுவும் இல்லை. எதுவும் என்னைவிட்டு போய்விடும் என்ற பயமும் இல்லை. அதனால் தான் நிம்மதியாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் சுகபோக வாழ்வை விடாத வரை நிம்மதி என்பது அருகில் வராது” என்றான். அரசனுக்கு தேவையான பதில் கிடைத்த திருப்தி இருந்தது. உடனே நவரத்தினங்கள் அலங்கரித்த தன்னுடைய மேலாடையை பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான். உடனே அலறிய பிச்சைக்காரன் இதை நீங்கள் கொடுப்பதால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகாது மாறாக இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலைதான் உண்டாகும். எனக்கு என்னுடைய நிம்மதி போதும்” என்று சிரித்தப்படி ஓடினான். இப்போதைக்கு இந்த நிம்மதியை நம்மால் பெறமுடியாது என்று நினைத்தப்படி அரசன் அரண்மனைக்குள் சென்றான்.

ஆசையே மகிழ்ச்சி என்று நினைப்பதால் தான் துன்பமும் கவலையும் எப்போதும் சூழ்ந்துகொள்கிறது. ஆசை இல்லாத மகிழ்ச்சி தான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை உணர்ந்துகொண்டால் நிம்மதியைத் தேடி அலைய வேண்டியதில்லை.

Sharing is caring!