ஆடி பட்டம் தேடி விதைப்போம்!

ஆண்டின், 12 தமிழ் மாதங்களில் ஆடியும், மார்கழியும் பீடு மாதங்கள். இறைவனை மட்டுமே நினைத்து தியானித்து இறைவழிபாட்டை செய்து மனதில் ஆற்றலையும், ஆன்மிகத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அந்த மாதங்களில் எவ்வித சுபநிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

அதனால் தான் ஆடி மாதத்துக்கு மட்டும் அதிக பழமொழிகளும் கூறினார்கள். ஆடிக் காற்றில் அம்மையே பறக்கும் என்பதைத்தான், நாம் இன்று ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று மாற்றி கூறுகிறோம். இவை மட்டுமல்ல, ஆடி செவ்வாய் தேடிக்குளி, ஆடித்தேரை தேடி தரிசி, ஆடிக்கூழ் அமிர்தமாகும், ஆடி வரிசை தேடி வரும் போன்ற பழமொழிகளுக்கிடையே முக்கியமானது ஆடி பட்டம் தேடி விதை என்பது.

விவசாயம் செழிக்க உகந்த மாதமாக ஆடி மாதத்தை சொல்வார்கள். ஆடி மாதம், தட்சணாயன காலத்துக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் சரியான அளவிலான அதிர்வலை கொண்ட சக்தியோடு வெளிப்பட்டு, பூமியை வந்தடையும். அதோடு பிராணவாயுவும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் ஆடி மாதம் விளங்குகிறது.

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.

மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும். மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும். பூமிக்கு வேண்டிய சூரியக் கதிர்களின் சக்தியும் மிகச் சரியாக கிடைக்கும்.

இதனால் மண் செழிப்பதோடு, விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை மகிழ்ச்சியாக்குகிறது. அற்புதமான விளைச்சலைத் தருவிக்கிறது என்பதை உணர்ந்து தான், முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை உண்டாக்கினார்கள்.

மிதமான மழைக்காலங்களில் விதைக்கப்படும் விதையில்,  மண்ணில் இருக்கும், மண்ணை வளப்படுத்தும் பூச்சிகளும் நிறைந்திருக்கும். வயல்களை நாசம் செய்யும் எலிகளை பிடிக்க, இந்தக் காலத்தில் பாம்புகள் வயலுக்குள் நுழைந்து, எலிகளை பிடிக்கும்.  இப்படி மண் வளத்தைப் பாதுகாக்கும் சிறு பூச்சிகள் முதல் பயிர்களை காக்கும் சூரியன் வரை ஆற்றலாக செயல்படுவதால், இம்மாதம் விளைச்சலுக்கு ஏற்ற மாதமாக ஆயிற்று.

Sharing is caring!