ஆடி மாதத்தின் சிறப்புகள். வாங்க பார்க்கலாம்..!

ஆடி மாதம் சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.

அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும்.

மேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை என பல சிறப்பு வழிபாட்டு தினங்களும் வருகின்றன.

ஆடி மாதத்தின் சிறப்புகள் : 

ஆடி கிருத்திகை :

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி (26 ஜூலை 2019) அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

ஆடி வாஸ்து பூஜை :

ஆடி மாதம் 11-ம் தேதி (27 ஜூலை 2019) அன்று வாஸ்து பூஜை வருகிறது. ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்து தை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பாகும். ஏனென்றால் தட்சிணாயணத்தில் வீடு கட்ட ஆரம்பித்து உத்திராயணத்தில் வேலையை முடிப்பது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.

ஆடி அமாவாசை :

ஆடி மாதம் 15-ம் தேதி (31 ஜூலை 2019) அன்று ஆடி அமாவாசை வருகிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவது ஆடி அமாவாசை. இந்த நாட்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நமக்கு நன்மை அளிக்கும்.

ஆடி பதினெட்டு :

ஆடி மாதம் 18-ம் தேதி (03 ஆகஸ்டு 2019) அன்று ஆடிப்பெருக்கு வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிற்றை மாற்றுவார்கள். அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள்.

கருட ஜெயந்தி :

ஆகஸ்ட் 5-ம் தேதி அதாவது ஆடி மாதம் 20-ம் நாள் ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் :

ஆடி மாதம் 24-ம் தேதி (9-ம் ஆகஸ்ட் 2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

Sharing is caring!