ஆணவத்தால் ஆன்மிகத்தை உணர முடியாது!

ஆசிரமத்தில் குருஜி ஒருவர் இருந்தார். மாணாக்கர்களுக்கு கற்றுத்தருவதை விட அனுபவ ரீதியாக புரிய வைக்கவே முற்படுவார். அதனாலேயே அவரிடம் உள்ள மாணாக்கர்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தார்கள். தொலைதூரத்தில் இருக்கும் அரசகுமாரர்களும் இவரைத் தேடி வந்தார்கள். உலகின் தலைசிறந்த ஞானிகளுக்கெல்லாம் ஞானியாய்  விளங்கிய குருஜிக்கு தெரியாத  விஷயங் கள் எதுவுமே இல்லை என்றாலும் குருஜி தன்னடகத்தோடு வாழ்ந்துவந்தார்.

வடநாட்டில்  எல்லாம் தெரியும் என்னும் மமதை கொண்ட மாணவன் ஒருவன் இருந்தான். சிறுவயது முதலே கற்பதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் வாழ்ந்து வந்தான். இளம் வயதிலேயே அனைத்தையும் கற்றுவிட்டாயே என்று  அந்நாட்டு மக்கள் அவனை பாராட்டினார்கள். அந்நாட்டில் மட்டுமல்ல உலகத்திலேயே இவனை போன்ற அதிபுத்திசாலி யாருக்குமே இல்லை என்று போற்றி பாராட்டினார்கள் மக்கள்.

ஒருமுறை புனித யாத்திரைக்காக அந்த நாட்டின் வழியே ஆன்மிக பாதை மேற் கொள்ளும் யாத்திரிகள் கூட்டம் வந்தது. அந்த ஊரின் முக்கிய பிரதிநிதியாக அவன் செயல்பட்டதால் மரியாதை நிமித்தம் அவர்களை வந்து சந்தித்தான். அந்நாட்டின் மிக முக்கியமானவன் இவன் என்றும் அனைத்தையும் கற்று கரைத்துக் குடித்தவன் என்றும் அவனை பாராட்டினார்கள். யாத்திரைக்கு வந்த ஆன்மிகவாதிகள் தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். அதோடு எங்கள் நாட்டில் ஒரு குருஜி இருக்கிறார். அவரைப் போன்ற ஞானியை நீங்கள் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கமாட்டார். அவரிடம் வந்து உங்கள் திறமையை நிரூபியுங்கள் என்றனர்.

உடனடியாக குருஜியை நோக்கி பயணமானான். நேரடியாக அவரிடம் சென்று என்னை விட நீங்கள் பெரிய ஞானி என்று கேள்விப்பட்டேன். நான் அனைத்தையும் கற்று வல்லவனாக இருப்பதாக என்னுடன் பழகியவர்கள் பார்த்தவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். அதனால் நம்மிருவரில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றான். கருத்துக்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதைப் பற்றி கவலைப்பட்டு என் நேரத்தைப் போக்கி கொள்ள நான் விரும்பவில்லை. நீயே அனைத்தையும் கற்ற ஞானி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார் பொறுமையாக.

வடநாட்டு பிரதேசத்தில் இருந்து வந்தவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது.  நான் தான் அறிவாளி என்று  வாக்குவாதத்தில் ஈடுபடாமல்  சட்டென்று அமைதியாகி விட்டாரே இவருடனா என் திறமையை நிரூபிக்க வேண்டும். ஒன்றும் அறியா தவர் என்று நினைத்தான். பிறகு குருஜியிடம் திரும்பி நான் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து செல்ல விரும்புகிறேன் தங்க அனுமதி கொடுங்கள் என்றான். அதனாலென்ன  யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதால் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார்.

மறுநாள் காலை குருஜி யாரையோ எதிர்பார்த்திருந்தது போல் இவனுக்கு தோன்றியது. யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டான். உனக்கு சொன்னால் புரியாது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அனைத்தும் கற்ற ஞானியாக என்னை போற்றும்போது எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிறீர்களே என்று அங்கலாய்த்தான். குருஜி நீ எவ்வளவு கற்றாய் என்பதை நானும் பார்க்க விரும்பு கிறேன்.  அதோ அந்த மரத்தில் இருக்கும் இலைகளை அள்ளிக்கொண்டு வா.  அதைப் பார்த்து  நீ எவ்வளவு கற்றிருக்கிறாய் என்பதை முடிவு செய்கிறேன் என்றார். இவனும் அப்பாடி இப்போது என்னிடம் நன்றாக மாட்டிக்கொண்டார் என்று கை நிறைய  இடமில்லாமல் இலைகளை அள்ளி வந்து இப்போது பார்த்தீர்களா.. உள்ளங்கையில் இடமில்லாத அளவுக்கு இலைகள் இருப்பதை போல் தான் நான் ஞானத்திலும் அனைத்தையும் பெற்று முழுமை பெற்றிருக்கிறேன் என்றான்.

அதைப் பார்த்த குருஜி பொறுமையாக சொன்னார். ஞானம் என்பது கற்பதால் வருவதல்ல. உணர்வால் வருவது. அதை புரிந்துகொள்ள மட்டுமெ முடியும். இந்த மரத்தில் இருக்கும் இலைகள் எல்லாம் ஞானம் போன்றது நீ பறித்த இலைகள்  தான் நீ பெற்ற ஞான துளிகள். இன்னும் நீ பெற வேண்டிய ஞானம் இந்த மரத்தின் இலைகள் போல் உலகில் படர்ந்திருக்கிறது.  ஆனால் அவற்றையெல்லாம்  நீ உணர வேண்டுமானால் மனதில் நான் என்னும் கர்வத்தைத் தங்க விடாதே என்று அறிவுரை கூறினார்.
நாமும் அப்படித்தான் வாழ்கிறோம். எல்லாம் எனக்குத் தெரியும் என்னும் எண்ணம் நம்மை அழிக்கவே செய்யும். ஆணவத்தால் ஆன்மிகத்தையும் உணர முடியாது. ஆத்மார்த்தமான அன்பையும் உணர முடியாது.

Sharing is caring!