ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றினால் மங்களம் தேடிவரும்…

விநாயகரின் அருளைப் பரிபூரணமாக பெறுவதற்கு எளிய அருகம்புல் மாலை போதும். அனைத்து மங்களத்தையும் வாழ்வில் கொண்டு வந்துவிடுவார். விநாயகருக்கு அருகம்புல் பிடித்த கதையைப் பார்க்கலாம்.

எமதர்மராஜனின் மகன் அனலாசுரன், சேரக்கூடாத சேர்க்கையால் தீய குணங்களைப் பெற்றவன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துன்புறுத்தி மகிழ்ந்தான். பிறப்பிலேயே அவனது உடல் சூரியனைப் போல் அனலைக் கக்கிற்று. அவனை எதிர்க்க நினைத்தாலும் யாராலும் அருகே செல்லமுடியவில்லை. இதனால் அனலாசுரனின் ஆட்டம் அதிகமாகியது. கண்ணில் பட்டவர்களைத் தாண்டி தேடிச் சென்று தேவர்களையும் துன்புறுத்த தொடங்கினான்.

தேவர்களுக்கும் கொதிக்கும் அவன் உடம்பு அனலை தாங்க முடியவில்லை. அனலாசுரனின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்று விநாயகரிடம் வந்தார்கள். யமதர்மனின் மகன் அனலாசுரன் செய்யும் அட்டூழியங்களை சொல்லி  ”நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார்கள். விநாயகரும் சம்மதித்தார்.

மறுநாள் அனலாசுரனைத் தேடி விநாயகர் வந்தார். அருகில் வருவதற்கு முன்பே அனலாசுரனின் அனல் விநாயகரின் மீது பட்டது. எவ்வளவு வெப்பம் என்று சற்றே பின்வாங்கினார் விநாயகர். அதைக் கண்டு சிரித்தான் அனலாசுரன். விநாயகருக்கு கோபம் அதிகமாகியது. அனலாசுரனை விட  அதிக  அனல் வடிவத்தைக் கொண்டு அனலாசுரனை விழுங்கிவிட்டார். அப்படியும் அவரது கோபம் தணியவில்லை. அவரது கோபத்தோடு அவரது வயிற்றில் இருந்த அனலாசுரனின் வெப்பமும் சேர்ந்து மேலும் வெப்பத்தை உண்டாக்கியது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தார் ஆனைமுகன்.

ஆனைமுகன் வெப்பத்தால் தவிக்க தேவர்கள் செய்வதறியாமல் பால், தயிரை குடம் குடமாக பிள்ளையாரின் மீது ஊற்றினார்கள். மேனி குளிர்ந்ததே தவிர வயிற்றில் இருக்கும் அனல் அப்படியே இருந்தது. சந்திரனை வரவழைத்தார்கள். சந்திரனும் தன்னால் இயன்றவரை தன்னுடைய கணங்களைக் கொண்டு விநாயகரை குளிர்விக்க செய்தார். அப்படியும் வெப்பம் தணியவில்லை. பிள்ளையார் அன்னையை அழைத்தார். கங்கை நீரை கொண்டு விநாயகரை குளிப்பாட்டினார்கள், இமயமலையில் பனிக்கட்டிகளோடு அமர வைத்தார்கள். எல்லாம் மேனியை மட்டுமே குளிர்வித்தது. என்ன செய்தும் பிள்ளையார் வயிறு வெப்பம்  உபாதையிலிருந்து  மீளவில்லை.

சப்தரிஷிகளை அழைத்தால் தீர்வு கிடைக்கும் என்று தேவர்கள் சப்தரிஷியை வரவழைத்தார்கள். சப்தரிஷிகள் நடந்ததை ஞானக்கண்களால் அறிந்து கொண்டார்கள். அனலாசுரனை விழுங்கிய ஆனைமுகன் வயிறை குளிர்விக்க  21 அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலையில் வைத்தார்கள். என்ன அதிசயம் விநாயகரின் மேனியும் வயிற்றில் இருந்த அனலும் ஒரு சேர குளிர்ந்தது. விநாயகரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தேவர்களும் மகிழ்ந்தார்கள். அந்த நொடி முதல் அருகம்புல்லை விரும்பி ஏற்றுக்கொண்டார் விநாயகர்.

முழு முதற் கடவுளான விநாயக பெருமானே உன் பக்தர்கள் அருகம்புல் மாலை அணிந்து வேண்டும் பிரார்த்தனையை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சப்தரிஷிகளும் தேவர்களும் கோரிக்கை விடுத்தார்கள். விநாயகப் பெருமானும் அதற்கு மகிழ்ச்சியுடன் இசைந்தார் அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு உரியதாயிற்று.

Sharing is caring!